'அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை' – அண்ணாமலை

‘அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை; தலையிடப்போவதும் இல்லை’ எனக் கூறியுள்ளார் அண்ணாமலை.   

கோவை மசக்காளிப்பாளையத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”டெல்லியில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தலைவர்கள் செய்து வருகிறார்கள். கேரளாவில் தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அம்மாநில முதலமைச்சர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. தமிழக முதலமைச்சரும் பேசவில்லை. டெல்லியில் மக்களுக்கு இடையூறு செய்வது போன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் காவல்துறை ஏவல்துறையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 21 பாஜகவினரை தமிழக அரசு வழக்குபதிந்து கைது செய்துள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க உள்ளது. உத்தரப்பிரதேசம் போன்று தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு ஆள் சேர்ப்பதில் அக்னி வீரர் திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

image
தமிழக மின்சார வாரியத்தின் மின் திட்ட ஒப்பந்தம் அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரத்தில் இருந்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தப்பிக்க முடியாது. தற்போதுள்ள தமிழக அரசு மாறும்போது முதல்நாள் முதல் ஆளாக செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார்.

அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை. தலையிடப்போவதும் இல்லை. பாஜக தனிமனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்தாது. எப்போதும் சித்தாந்ததை முன்னிலைப்படுத்துவோம். கட்சியின் தொண்டர்களை முன்னிலைப்படுத்துவோம். தனியார் மூலம் இயக்கப்பட்ட கோவை – ஷீரடி இடையிலான ரயிலில், தங்களுக்கு எந்த வசதி தேவையோ அதை தேர்ந்தெடுத்து மக்கள் பயணித்துள்ளனர். இந்த ரயிலில் செல்லுங்கள் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த வசதி வேண்டாமெனில், சாதாரண ரயிலில் ஷீரடி செல்லவும் ரயில் உள்ளது. அந்த ரயில் நிறுத்தப்படவில்லை”என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: அதிமுகவின் ஒற்றை தலைமை சர்ச்சை: ’’தொண்டர்களால் நான்; தொண்டர்களுக்காக நான்’’ -ஓபிஎஸ் பேட்டிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.