அமேசான் காட்டில் மாயமான பழங்குடியின நிபுணர், பத்திரிக்கையாளர் கொன்று புதைப்பு – அதிர்ச்சி சம்பவம்

ரியோ டி ஜெனிரோ,

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டான் பிலிப். இவர் பிரேசிலில் தங்கி அமேசான் காடுகளில் வசித்துவரும் பழங்குடியின மக்கள், வாழ்வியல் முறைகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்டும், அமேசான் பாதுகாப்பு தொடர்பான புத்தகங்களை எழுதியும் வருகிறார்.

அமேசான் காடுகளில் பழங்குடியின மக்களை சந்திப்பதற்காக டான் பிலிப்பின் வழிகாட்டியாக பிரேசிலை சேர்ந்த பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஃபிரிரா பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் அமேசான் காடுகளில் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் பழங்குடியின மக்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, டான் பிலிப் மற்றும் அவரது வழிகாட்டி ப்ரூனோ கடந்த 5-ம் தேதி அமேசான் காட்டின் ரியோ கிராண்டி டு சுலோ மாகாணத்தில் உள்ள சா கேப்ரியல் கிராமத்தில் இருந்து படகு மூலம் மற்றொரு பழங்குடியின கிராமத்திற்கு புறப்பட்டனர்.

அதன்பின்னர், இருவரும் அருகில் உள்ள கிராமத்திற்கு வரவில்லை. இது குறித்து பழங்குடியின மக்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மாயமமான இருவரையும் போலீசார், பாதுகாப்பு படையினர், பழங்குடியின மக்களும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மாயமான டான் பிலிப் மற்றும் அவரது வழிகாட்டி ப்ரூனோ இருவரும் கொலை செய்யப்பட்டு அமேசான் காட்டுக்குள் புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டான் மற்றும் ப்ரூனோவை கொன்று புதைத்ததாக சா கேப்ரியல் கிராமத்தை சேர்ந்த அம்ரில்டோ என்ற நபர் போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரில்டோ அமேசானில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்து வந்ததாக தெரிவித்துள்ள போலீசார் இதை கண்டித்த விவகாரத்தில் டான் மற்றும் ப்ரூனோ கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் அம்ரில்டோவின் சகோதரன் ஒலிவிரா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அமேசான் ஆற்றின் கரையில் புதைக்கப்பட்ட இரு உடல்களை கைப்பற்றிய போலீசார் இந்த உடல்கள் டான் பிலிப் மற்றும் அவரது வழிகாட்டி ப்ரூனோ தானா? என்பது குறித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.