ரிஷிகளையும், ஞானிகளையும் நம்பும் ஆளுநர் ரவி எதற்காக பீகாருக்கு விமானத்தில் செல்கிறார். ஆளுநருடைய சனாதனத்தை பற்றிய கருத்து அவருடைய அறியாமையை காட்டுகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.
ஆளுநரை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், துணை தலைவர் கலி. பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, ”ஆளுநருடைய செயல்பாடு ஒட்டுமொத்தமாக தமிழ் நாடு என்கின்ற மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பிய 21 மசோதாக்களையும் ஊற வைத்து ஊறுகாய் போட்டுக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். தமிழக அரசின் செயல்பாட்டை முடக்குவதற்காக ஆளுநர் ஆர்எஸ்எஸ் அமைப்பால் அனுப்பப்பட்டுள்ளார்.
ரிஷிகளையும், ஞானிகளையும் நம்பும் ஆளுநர் ரவி எதற்காக பீகாருக்கு விமானத்தில் செல்கிறார். ஆளுநர் பேசிய கருத்துக்கள் தொலைக்காட்சி எனும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தான் என நாம் அறிந்து கொள்கிறோம். ஆளுநருடைய சனாதனத்தை பற்றிய கருத்து அவருடைய அறியாமையை காட்டுகிறது. ராஜ்பவன் ஆர்எஸ்எஸ் உடைய கூடாரமாக செயல்பட்டு வருகிறது. ரிஷிகள், சனாதனம் பற்றிய கருத்தை ஆளுநர் திரும்ப பெற வேண்டும். ஆளுநர் தனது கருத்தை திரும்பப் பெற்று, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாத பட்சத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடைபெறும். மனு தர்மம் என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட நூல் என்பதை இந்து பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வர்ணாசிரமம், தீண்டாமையும் தான் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: “ஆதீனத்தை தொட்டுப் பாருங்கள் பார்ப்போம்…”- மதுரை கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM