சேலம் அருகே காதலனின் பேச்சைக்கேட்டு மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் , மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காட்டை சேர்ந்தவர் சக்திவேல் விவசாயி. இவரது மனைவி புகழரசி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவி புகழரசி செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசிக் கொண்டு இருப்பதை கவனித்த சக்திவேல் மனைவி நடத்தையின் மீது சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் குடிபோதையில் வீட்டிற்கு வரும் சக்திவேல் மனைவியை டார்ச்சர் செய்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை வழக்கம்போல் சக்திவேல் போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டில் வைத்தும் மது அருந்தி உள்ளார். மனைவி புகழரசி ஊற்றிக்கொடுக்க மூக்கு முட்ட மது அருந்திய சக்திவேல் , மது மயக்கத்தில் அப்படியே அயர்ந்து தூங்கி விட்டதாக கூறப்படுகின்றது.
;புதன்கிழமை காலையில் பார்த்தபோது சக்திவேல் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் சக்திவேல் உயிரிழந்துவிட்டதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்திவேலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தம்பி முத்துசாமி, கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து சக்திவேலின் மனைவி புகழரசியின் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.
புகழரசிக்கும் முத்துக்குமாருக்கும் பல வருடமாக தவறான தொடர்பு இருந்துள்ளது. இதனை கணவர் சக்திவேல் கண்டிக்கவே அடிக்கடி கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் திருமணம் கடந்த காதலன் முத்துக்குமாருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய புகழரசி திட்டம் தீட்டியுள்ளார்.
காதலன் முத்துக்குமார் யோசனைப்படி புகழரசியிடம், விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தை மதுவில் கலந்து ஊற்றிக் கொடுத்துள்ளார். மனைவி ஆசையாக ஊற்றிக் கொடுப்பதை ஆனந்தமாக வாங்கி குடித்ததால் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
அந்த நள்ளிரவு நேரத்தில் கள்ளக்காதலன் முத்துக்குமாரை , புகழரசி வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து சக்திவேலை தொட்டு பார்த்து, சக்திவேல் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளார்.
புகழரசியுடன் மணிக்கணக்கில் கொஞ்சி பேசுவதற்காக, தான் வாங்கி கொடுத்த செல்போனை வாங்கிக் கொண்டு முத்துக்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து புகழரசி, காதலன் முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கொலை திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட செல்போனை கைப்பற்றினர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். கணவனை கொலை செய்த விபரீத மனைவியால் இரண்டு குழந்தைகள் அனாதையாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.