இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரிக்குப் பின் முதன்முறையாக 12,000ஐ கடந்து ஒரு நாள் தொற்று பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளாது. இது நேற்றைவிட 38.4 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பின்னர் ஒருநாள் பாதிப்பு 12,000 ஐ கடந்தது இதுவே முதன்முறை. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,257,730 என்றளவில் உள்ளது.
மகாராஷ்டிரா, கேரளாவில் அதிகம்: நாட்டிலேயே மகாராஷ்டிராவிலும், கேரளாவிலும் தான் தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 4024 பேருக்கு தொற்று உறுதியானது. கேரளாவில் 3488 பேருக்கு தொற்று உறுதியானது. டெல்லியிலும் அன்றாட பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு தொடர்ந்து 2வது நாளாக நேற்று அன்றாட பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில், 1375 பேருக்கு தொற்று உறுதியானது.
4வது அலை வருமா? இந்தியாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று 4வது அலை ஏற்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களோ, மருத்துவமனைகளிலும் அனுமதியாவோர் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி அதற்கான சாத்தியம் குறைவென்று கூறுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 11 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,24,803 என்றளவில் உள்ளது. கரோனாவில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 98.65% என்றளவிலேயே இருக்கிறது.
நாட்டில் கரோனா பரவல் விகிதத்தைத் பொறுத்தவரை அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 2.35% என்றளவிலும் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் என்பது 2.38 சதவீதம் என்றும் உள்ளது.
195.67 கோடி டோஸ் தடுப்பூசி: நாடு முழுவதும் இதுவரை 195.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுடையோரில் 3.54 கோடி டோஸ் முதல் தவணை தடுப்பூசியும், 2.02 கோடி டோஸ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
15 வயது முதல் 18 வயதுடையவர்களில் 5.99 கோடி டோஸ் முதல் தவணை தடுப்பூசியும், 4.73 கோடி இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதில் 3.64 கோடி டோஸ் தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.