புதுடெல்லி: கடந்த 2020-21-ம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 4.2% ஆகக் குறைந்துள்ளதாக பிஎல்எப்எஸ் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 2019-20-ல் 4.8% ஆக இருந்தது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (என்எஸ்ஓ) தொடங்கப்பட்ட பிஎல்எப்எஸ் அமைப்பு, உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை தயாரிக்கிறது
கரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட கதவடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதோடு பலர் வேலையிழந்தனர். இதனால் ஜூலை 2020 முதல் 2021 ஜூன் வரையிலான காலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பணியில் இருப்போர் மற்றும் வேலை இல்லாதவர்கள் விகிதத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் வேலையின்மை விகிதத்தைக் கணக்கிடுகிறது. இந்த அறிக்கை 2017-18-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது.
கரோனா பெருந்தொற்று 2-வது அலை பரவலின்போது முன்களப் பணியாளர்கள் களப் பணியில் ஈடுபடுவதை நிறுத்தினர். பின்னர் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. கரோனா பரவல் காலத்தில் வேலை இழப்பு அதிகம் இருந்ததாகவும்,பொருளாதார மந்தநிலை காரணமாக பலர் வேலையிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒருவர் ஒரு வாரத்தில் ஏதேனும் ஒரு வேலையில் ஒரு மணி நேரம் பணி புரிந்திருந்தாலே அவர் வேலையில் இருப்பதாகக் கணக்கிடப்படும். இதன் ஆண்டறிக்கை கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்பு, வேலையின்மை விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். காலாண்டு அறிக்கை நகர்ப்புறத்தை சார்ந்ததாக இருக்கும்.