துபாய்:இந்தியாவில் இருந்து இறக்குமதியான கோதுமையை நான்கு மாதங்களுக்கு வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துஉள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு, கடந்த மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
நான்கு மாதம்
இதை பின்பற்றி மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நான்கு மாதங்களுக்கு தடை விதித்து உள்ளது. இது குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச நிலவரங்களால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கருதி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நான்கு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள்
உள்நாட்டு தேவையை அடிப்படையாக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதே சமயம், மே, 13க்கு முன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த கோதுமை, கோதுமை மாவு ஆகியவற்றை உரிய ஆவணங்களை அளித்து ஏற்றுமதி செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement