ஆனந்த விகடனின் `இன் அண்டு அவுட்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த நச் பதில்கள் இதோ!
ரொம்பவே உணர்ச்சிவசப்படுபவரா மிஷ்கின்?
சமீப காலமாக வரலாற்று நூல்கள் அதிகம் படிக்கிறேன். அதில் குறிப்பாக இந்திய வரலாற்றை படிக்கும் போது, மனிதர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடாது என்கிறது. சில பேர் மட்டுமே உணர்ச்சி வசப்படணும். சில பேர் மட்டுமே பேசணும். சில பேர் பேசக்கூடாதும் சொல்லுது. என்னோட சிறு வயது முதலே நான் வீட்டுல ரொம்ப சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்பட்டேன். புத்தகங்கள் வாசிப்பு அதிக இருந்துச்சு. வீட்டுல வறுமை இருந்தது, எனக்கு சந்தோஷமான ஒரு வரப்பிரதமா அமைந்ததாக பாக்கறேன். ஏன்னா, வறுமையில இருந்ததால எனக்கு சுதந்திரம் அதிகம் இருந்துச்சு. எங்கே போனாலும் நடந்தே போயிருக்கேன். எங்க அப்பா, என்னை சைக்கிள்ல கூட்டிட்டு போவார். அந்த சுதந்திரம் இருந்ததால, என் சின்ன வயசில எப்படி நிஜமா இருந்ததோ, அப்படி நிஜமா திரைப்படத் துறையிலும் வாழ்றதா நினைக்கிறேன். உணர்ச்சி வசப்படுதல் என் மனிதத்தன்மையை எனக்கு காட்டுறதா நினைக்கறேன். நான் உணர்ச்சி வசப்பட்டு எந்தவொரு மனிதரையும் கை நீட்டி அடிச்சதே கிடையாது. மனசுலகூட கையை ஓங்கினதில்ல. பெரும் தவறுகள் எதுவும் பண்ணவே இல்ல. உணர்ச்சி வசப்பட்டு என் மனதில் இருக்கறதை கொட்டித் தீர்க்க முடியுது. முடிஞ்ச வரைக்கும் உண்மையை சத்தமா சொல்றேன்.”
ஒரு ஆடியன்ஸா எப்படிப்பட்ட படங்கள் பார்ப்பீங்க..?
”நான் அஞ்சு வயசு குழந்தைங்க. இன்னமும் பேய்ப் படங்களை நைட்ல பார்க்கவே மாட்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கும். கொலைகள் அதிகம் இடம்பெறும் படங்கள்ல.. அதாவது கிராஃபிக்கல் வயலென்ஸை தேவையில்லாம திணிக்கப்பட்ட படங்களையும் பார்க்க மாட்டேன். ரொம்பவே தேர்ந்தெடுத்துதான் படங்கள் பார்ப்பேன். வருஷத்துக்கு மூணு அல்லது நான்னு படம்தான் பார்ப்பேன். சீரீஸ் பார்க்கறது கிடையாது. இயக்குநர் ஆகுறதுக்கு முன்னாடி, ஒரு குழந்தையா மாறி ‘ஆ… ன்னு வாயைத் திறந்து படங்கள் பார்த்திருக்கேன். ஆனா, இப்ப தடுக்குது. எந்த ஒரு படத்துலேயும் முதல் பத்து ஷாட்டை கவனிப்பேன். அந்த பத்து ஷாட்ல ஒரு டைரக்ஷன், நரேட்டிவ் இருக்கும். அந்த பத்து ஷாட்ல எனக்கு பிடிக்கல, புரியலைனா என் மூக்குக்கண்ணாடியை போட்டுட்டு கண்ணை மூடி தூங்க ஆரம்பிச்சிடுவேன். பிரிவியூலகூட அதனாலதான் படங்கள் பார்க்கறதில்ல. ஒரு நார்மலான ஆடியன்ஸா என்னால ஆகமுடியலையேனு வருத்தப்படுறேன். அதனாலதான் கிளாசிக்ஸ் படங்களை பார்க்கறேன். ‘காந்தி’, ‘செவன் சாமுராய்’.. போன்ற படங்கள் நான் இயக்குநர் என்பதையே மறக்கடிச்சிடும் படங்கள். அப்படியான படங்கள் பார்க்கப் பிடிக்கும்”.
உங்க தனிப்பட்ட வாழ்க்கையில நடந்த விஷயங்கள்.. உங்க எழுத்திலும் பிரதிபலிக்குமா?
”எல்லாமே பர்சனல் லைஃப்தான். தஸ்தயெவ்ஸ்கியை நிறைய பேர், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய்னுதான்னு சேர்த்து சொல்வாங்க. வாழ்க்கையோட எல்லா பக்கங்களையும் புரட்டிப் போட்டு பார்த்தவங்க அவங்க. பெரும் வாழ்க்கை வாழ்ந்தவங்க. என்னுடைய படங்கள் அவங்களோட பாதிப்புகள் இல்லாமல் இருந்ததே கிடையாது. இலக்கியம் படிச்ச பலரும் ‘நீங்க டால்ஸ்டாயை படிச்சீங்களா?’னு கேட்பாங்க. ‘இந்த வாழ்க்கையை நான் எப்படிப் பார்க்க வேண்டும்னு அவங்க எனக்கு சொல்லித் தர்றாங்க. உங்க கேள்வியில நீங்க என் மனைவியை பற்றிக் கேட்டபோது, நான் வேற மாதிரி கடந்து போயிருக்கலாம். என் மனைவியை பற்றி நான் பகிர்ந்தபோது உண்மையா, நேர்மையா சொல்லியிருக்கீங்கனு நீங்க சொன்னீங்க. அந்த கேள்விக்கு இப்படி ஒரு பதில் சொல்றதுக்கு காரணம். தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் தான்னு நான் நினைக்கறேன். எப்போதுமே ஒரு இயக்குநருக்கோ, ஒரு எழுத்தாளருக்கோ ஒரு மூத்த எழுத்தாளன் குருவாக இருந்துகொண்டே இருக்கிறான். ஸோ, என் எல்லா கதைகளும் வாழ்க்கையில் இருந்து எடுத்ததுதான். எல்லாரும் வாழ்ற வாழ்க்கை ஒண்ணுதான். ஆனா அதை எப்படி வாழுறதுனு வாழ்க்கையில இருந்து சொல்லிக் கொடுக்கறதை விட, இலக்கியத்துல, கதைகள்ல இருந்து சொன்னா சுவாரஸ்யமா இருக்கும்னு நினைக்கறேன்.”