வீட்டு வேலை தொழிலாளர்கள் தினம் ஜூன் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சாதாரணமாக வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வாரத்தில் ஒரு நாளாவது விடுமுறை இருக்கும். ஆனால் இந்தியக் குடும்பங்களில் சமையலறையில் வேலை செய்யும் பெண்களுக்கு விடுமுறையே கிடையாது. இன்று பெண்கள் அலுவலக வேலைக்குச் சென்றாலும், பெரும்பாலான குடும்பங்களில் வீட்டுக்குத் திரும்பிய பிறகும் வேலை செய்ய வேண்டும். இது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவே இருக்கிறது. அலுவலக வேலைக்குப் போகும் பெண்களுக்கு இந்த நிலை என்றால் சமையல், தூய்மைப் பணி, குழந்தை பராமரிப்பு போன்ற வேலைகளை தங்கள் வீட்டிலும், வேலைக்கும் செல்லும் வீடுகளிலும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் வீட்டு வேலை தொழிலாளர்களின் மனநிலையும், உடல்நிலையும் இன்னும் மோசமாகத்தான் இருக்கும்.
வீட்டிலுள்ள குழந்தைகள் முதியோர்களைப் பராமரிப்பவர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், வீடுகளில் உள்ள துணிகளைத் துவைப்பவர்கள், பெரிய மால்களில் வேலை செய்பவர்கள் என அனைவரும் வீட்டு வேலை தொழிலாளர்களில் அடங்குவர். வீட்டு வேலை தொழிலாளர்கள் உரிமையைப் பாதுகாக்கும் விதமாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆண்டுதோறும் ஜூன் 16-ம் தேதியை வீட்டு வேலை தொழிலாளர்கள் தினமாக அனுசரித்து வருகிறது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் C189 உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் ஜூன் 16-ம் தேதி வீட்டு வேலை தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
வீட்டு வேலை தொழிலாளர்கள் அவர்களின் தினசரி வாழ்க்கை குறித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
சென்னை அரும்பாக்கத்தில் வசித்துவரும் ராதா பிரபல மால் ஒன்றில் வேலை செய்கிறார். நம்மிடம் பேசிய அவர், “விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திரிக்கணும். வீட்டில் உள்ள எல்லா வேலையும் பார்க்கணும். பிறகு அவசர அவசரமாக சமைச்சு வச்சிட்டு வேலைக்கு ஓடணும் . அங்கும் அதே வேலைதான். ஆனால் அதிகமாக வேலை இருக்கும். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வர்றதுக்கு இரவு எட்டுமணி ஆயிடும். சிலநேரம் ஓவர் டைம் பார்த்துட்டு வீட்டுக்கு வர பத்து மணி ஆயிடும். முதுகு வலி, கழுத்து வலி, கால் வலினு உயிர் போகும். வீட்டுக்கு வந்து தூங்கலாம்ணு எண்ணும் போதுதான் வீடு மோசமா கிடக்கிறது தெரியும். பாத்திரம் போட்ட படியே கிடக்கும். சாப்பிட்ட தட்டைக்கூட கழுவாமல் வீட்டுல உள்ளவங்க அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். அவர்களும் துணி துவைக்க மாட்டார்கள், நேரங்கெட்ட நேரத்தில் துணியை ஊற வைப்பார்கள் எல்லாத்தையும் முடித்துக்கொண்டு தூங்க இரவு ஒரு மணி ஆயிடும். மறுபடியும் காலையில சீக்கிரம் எழுந்திரிச்சி ஓடணும், ஓய்வே எதிர்பார்க்க முடியல. வலி அதிகமா இருக்கும்போது கை கால் யாராவது பிடித்து விடுவார்களா என்று எத்தனையோ நாள் ஏங்கியது உண்டு. ஓடி ஓடி உடம்பு வீணாப் போச்சு” என்று வருந்துகிறார் ராதா.
அண்ணா நகரில் வாழும் தேவகி, “வேலைக்குச் செல்லும் வீடுகளில் ஆரம்பத்தில் ஒன்று இரண்டு வேலைகள்தான் இருக்கு அதுக்கு தான் சம்பளம் இவ்வளவுனு சொல்லி வைக்கிறாங்க. ஆனால் சம்பளத்துக்கு மீறி வேலை வாங்குறாங்க. சம்பளத்தை உயர்த்த மாட்றாங்க. வேலை செய்யும்போது ஆத்திர, அவசரத்துக்குக்கூட போக முடியாது. வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பாத்ரூமை நல்லா சுத்தமா துடைக்கச் சொல்கிறார்கள்… ஆனால் நாங்க போகக்கூடாது. தீபாவளி பொங்கலுக்குக்கூட விடுமுறை கிடையாது. அந்த நாள்களில்தான் வேலை அதிகமா இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் நல்ல நாளில்கூட நேரம் செலவழிக்க முடியுறது இல்லை. வீட்டு உரிமையாளர்கள் ஊருக்கு 10 நாள்கள் போனால்கூட எங்க சம்பளம்தான் குறைப்பார்கள். விலைவாசி அதிகமா இருக்கு எப்படி நாங்க சமாளிப்பது” என்று ஆதங்கப்படுகிறார் தேவகி.
இது குறித்து பெண் தொழிலாளர் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் சுமதி அவர்களிடம் பேசினோம். “சென்னை போன்ற மாநகரில் வேலை செய்யும் பெரும்பாலான வீட்டு வேலை தொழிலாளர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். வீட்டு வேலை என்றாலே பெண்கள்தான் செய்ய வேண்டும் என்ற பிற்போக்குத்தனமே இதற்குக் காரணம். வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் வேலை பறிபோகலாம்.
அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலைக்கான சம்பளம் மிக குறைவு. அவர்கள் வேலை செய்யும் நேரம் இதுவென வரையறுக்கப்படவில்லை. சில நேரங்களில் வீட்டு உரிமையாளர்கள் விடியற்காலையிலும், இரவு நேரங்களில்கூட வேலைக்கு அழைக்கப்படுகின்றனர். ஆனால் வீட்டு உரிமையாளர்கள் சொல்லும் நேரத்துக்கு முன்னதாக வந்தால் தொழிலாளர்கள் வெளியில் நிற்க வைக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் சொந்த வேலைகளிலும் குடும்பங்களிலும் கவனம் செலுத்துவது சிரமமாக இருக்கிறது. கொரோனா காலங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் சிரமத்துக்கு ஆளாகினார்கள். கொரோனா பரவல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் எத்தனையோ தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதனால் அவர்கள் குடும்பம் கடனிலும் வறுமையிலும் வாடியது. வீட்டு வேலை தொழிலாளர்களில் ஆண்களையும் உள்ளடக்கினால் மட்டுமே பாலின சமத்துவத்தை உறுதி செய்ய முடியும்” என்கிறார் அவர்.
“வீட்டு வேலை தொழிலாளர்களுக்கென தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியம் சரி வர செயல்படுகிறதா என்று தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும். அதே போல, வீட்டு வேலை தொழிலாளர்களுக்கென அரசு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள C189 உடன்படிக்கையை ஒன்றிய அரசு அங்கீகரிக்க வேண்டும். அமைப்புசாரா அனைத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இது தான் அந்தத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.