உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதிக்கு தொடரும் சிக்கல் முடிவுக்கு வராத நிலையில், 5 நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்பு, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சராசரியாக 6 மில்லியன் டன் வேளாண் பொருட்களை உக்ரைன் மாதந்தோறும் ஏற்றுமதி செய்து வந்தது.
ஆனால் தற்போது, இந்த அளவின் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே ரயில், டான்யூப் நதி மற்றும் லொறிகள் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், 2020/21 பருவத்தில், ரஷ்யா 52.32 மில்லியன் டன் (7.8 சதவீதம்) மற்றும் உக்ரைன் 69.82 மில்லியன் டன் (11.3 சதவீதம்) தானியங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
மட்டுமின்றி எண்ணெய் வித்துகளையும் உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்துள்ளது. உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் சூரியகாந்தி விதை மற்றும் எண்ணெயில் 52 சதவீதம் 2020ல் உக்ரைனிலிருந்து ஏற்றுமதி செய்யபப்ட்டுள்ளது.
தற்போது, சமையல் எண்ணெய் விநியோகம் சீர்குலைந்து, சமையல் எண்ணெய் விலை தானியங்களின் விலையை விட உச்சம் தொட்டுள்ளது.
மேலும், உக்ரைன் தானியங்களின் ஏற்றுமதி ரஷ்யாவால் தடைபட்டுள்ளது ஒருபக்கம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியில் சிக்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகள் தற்போது செய்வதறியாது ஸ்தம்பித்துப் போயுள்ளது.
2022 இறுதிக்குள் வறட்சியின் காரணமாக இப்பகுதியில் 20 மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவுக்கே அல்லல்படும் நிலை ஏற்படும் என நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியா தங்களது கோதுமை இறக்குமதியில் 90 சதவீதத்திற்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைனை நம்பியுள்ளது.
மட்டுமின்றி, உலக அளவில் 44 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய கோதுமை கையிருப்பான சுமார் 300 மில்லியன் டன்கள் என்பது சுமார் நான்கு மாதங்களுக்கு வருடாந்திர உலகளாவிய நுகர்வுக்கு போதுமானதாகும்.
உக்ரைனில் தற்போது 20 முதல் 25 டன் தானியங்கள் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட போர் காரணமாக இந்தமுறை அறுவடை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றே கூறப்படுகிறது.
மேலும், உக்ரைனில் இருந்து இந்த ஆண்டு இறுதி வரையில் போதிய ஏற்றுமதி நடைபெறாமல் போனால், உலகம் முழுவதும் 55 மில்லியன் டன் தானியங்களின் பற்றாக்குறை ஏற்படும் என்றே அஞ்சப்படுகிறது.