உச்ச நீதிமன்றம் உரிய தீர்வு அளிக்கும்வரை மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சி செய்ய வேண்டாம்: கர்நாடக முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்

சென்னை: தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் ஏற்புடையதல்ல. மேகேதாட்டு அணை பிரச்சினை தமிழக விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினையாகும்.

இதை அரசியலாக்கும் அவசியமோ, எண்ணமோ தமிழக அரசுக்குஇல்லை. தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினை குறித்து பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ளதை, அரசியல் ஆதாயத்துக்காக என்று கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

ஓர் ஆங்கில நாளிதழில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்கள் நடத்தி உள்ளதாகவும், இந்தக் கூட்டங்களில் தமிழக அரசு பங்கேற்கவில்லை என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளதாகவும் செய்தி பிரசுரமாகியுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

இது தொடர்பாக, கர்நாடக அரசு அதிகாரிகள், அம்மாநில முதல்வருக்கு உரிய தகவல்கள் அளிக்கவில்லை போலும். இக்கூட்டங்களில் தமிழக அரசுப் பிரதிநிதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றது குறித்த விவரங்கள், கூட்ட அறிக்கைகளில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி நடுவர் மன்றம், மாநில வாரியாக திட்டங்களை ஆராய்ந்து, ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைக் கணக்கிட்டு, உரிய நீரைப் பங்கீடு செய்துள்ளது. மேலும், சில திட்டங்களை நிராகரித்தும் உள்ளது. இதை உச்ச நீதிமன்றம், 2018 பிப்ரவரி 16-ம் தேதி வெளியிட்ட ஆணையில் முழுமையாக உறுதி செய்துள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, இறுதிஆணையில் இல்லாத ஒரு பெரிய நீர்த்தேக்கத் திட்டத்தை மேகேதாட்டுவில், அதுவும் கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர்ப் பங்கீட்டிலேயே கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது, உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி, எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது. கர்நாடக அரசு பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கலுக்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்கெனவே முடித்துள்ள நிலையில், தற்போது மேகேதாட்டு நீர்த்தேக்கத் திட்டத்தை, குடிநீர்த் தேவைக்காக என்ற போர்வையில், அதுவும் 4.75 டி.எம்.சி. தேவைக்காக, 67.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையைக் கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல.

உச்ச நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனை குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ள போது, கர்நாடகஅரசு மேகேதாட்டு அணை கட்ட முயற்சி மேற்கொள்வது சட்டத்துக்குப் புறம்பானதாகும். ஆகையால், உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு அளிக்கும் வரை, மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதல்வரை, தமிழக அரசு சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.