‘மெதுவான ஆடுகளங்கள் மற்றும் பெரிய மைதானங்களில் பந்துவீசுவதையே நான் எப்போதும் விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார் ஹர்ஷல் படேல்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனம் பெற்றவர் ஹர்ஷல் படேல். கடந்த ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான ஹர்ஷல் படேல் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஹர்ஷல் படேல் கூறுகையில், ”உண்மையைச் சொல்வதானால், கடந்த இரண்டு ஆண்டுகளாக (ஐபிஎல்லில்) நான் எவ்வாறு பந்து வீசுகிறேன் என்று பலர் கவனிக்கிறார்கள். ஒவ்வொரு பந்து வீச்சாளரின் பலமும், பவுலிங் திறனும் எதிரணியினருக்கு தெரியும். ஒரு பந்துவீச்சாளராக, அவர்களை விட ஒரு படி மேலே இருப்பதே எனது வேலை. ஒரு நாளின் முடிவில் நீங்கள் 15 திட்டங்களை வைத்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் அழுத்தமான சூழ்நிலையில், நீங்கள் வெளியே சென்று நம்பிக்கையுடன் செயல்படவில்லை என்றால், எல்லாமே தவறாக முடியும். அந்தமாதிரியான நேரத்தில் சிறந்த பந்து வீச்சை நிறைவேற்ற முயற்சிப்பதில் எனது கவனத்தை செலுத்துவேன்.
உம்ரான் மாலிக்கைப் போல் என்னால் வேகமாக பந்துவீச முடியாது என்பதால் வேகத்தை குறித்து நான் கவலைப்பட வேண்டியதில்லை. சர்வதேச அளவில் திறமையான பவுலராக என்னை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளராக இருந்ததில்லை. ஆனால் என்றேனும் ஒரு நாளில் 140 கிமீ வேகத்தில் வீசமுடியும். எல்லா ஆடுகளங்களிலும் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர். மெதுவான ஆடுகளங்கள் மற்றும் பெரிய மைதானங்களில் பந்துவீசுவதையே நான் எப்போதும் விரும்புகிறேன். டெல்லி போன்ற ஆடுகளங்களில் நீங்கள் தொடர்ந்து விளையாடினால், அது உங்கள் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுக்கலாம்” என்று கூறினார்.
5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 3 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி நாளை நடைபெறுகிறது.
இதையும் படிக்கலாம்: ‘ரோகித் சர்மா இல்லனா இவர்தான் கேப்டனா இருக்கனும்’ வாசிம் ஜாஃபர் கருத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM