பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தினங்களுக்கு முன்புதான் மும்பை வந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டுச் சென்றார். அதே சமயம் சிவசேனாவுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. அதில், `காங்கிரஸ் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் நினைவுகளை அழிக்க பா.ஜ.க விரும்புகிறது. நேரு, காந்தியின் பரம்பரையையும் எதிர்காலத்தையும் அழிக்க விரும்புகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இதன் மூலம் யாரது சட்டை காலரையும் தங்களால் பிடிக்கமுடியும் என்பதை காட்ட பா.ஜ.க விரும்புகிறது. இது சக்தி வாய்ந்த நபர்களின் அதிகார திமிராகும்.
நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் நினைவுகளை அழிப்பதோடு மட்டுமல்லாது நேரு-காந்தியின் பரம்பரை எதிர்காலத்தையும் அழிக்க பாஜக விரும்புகிறது. இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி… நாளை யாராகவும் இருக்கலாம். மத்திய அரசு ஹிட்லர் எதிரிகளை அழிக்க எரிவாயு அறைகளை கட்டியது போன்ற அறைகளை கட்டுவது ஒன்றுதான் பாக்கியாக இருக்கிறது. பிறகு எப்படி சட்டத்தில் சமத்துவம் ஏற்படும்.
சிவசேனா, ஆர்.ஜே.டி, சமாஜ்வாடி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அமலாக்கப் பிரிவின் கண்காணிப்பில் இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளிடம் அமலாக்கப் பிரிவு ஒருபோதும் ரெய்டு நடத்தியதில்லை.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, சஞ்சய் ராவுத், அனில் பரப், லாலுபிரசாத் யாத்வ் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்வதுதான் அமலாக்கப் பிரிவின் ஒரே வேலையாக இருக்கிறது. நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு காங்கிரஸ் கேட்ட முதல் தகவல் அறிக்கையைக்கூட கொடுக்க மறுக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மறுக்கிறது” என்று சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.