சென்னை: “ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக பேசவில்லை. கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல இணைந்து செயல்படுகின்றனர். ஒற்றைத் தலைமை எல்லாம் மற்றவர்கள் கிளப்புகிற பிரச்சினை” என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர்கள் பொன்னையன், செம்மலை, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பொதுக்குழு தீர்மானம் பற்றிதான் இன்று கூட்டம் நடந்தது. ஒற்றைத் தலைமை குறித்த கேள்வியே தற்போது கூடாத கேள்வி. தேவையற்ற கேள்வி, அதுகுறித்து பொதுக்குழு முடிவு செய்யும். பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி கட்டாயமாக நடைபெறும். ஒற்றைத் தலைமை குறித்து ஜோசியம் சொல்ல முடியாது. இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு.
ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக பேசவில்லை. கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல இணைந்து செயல்படுகின்றனர். ஒற்றைத் தலைமை எல்லாம் மற்றவர்கள் கிளப்புகிற பிரச்சினை. அதுகுறித்து கட்சிதான் முடிவெடுக்கும். நகமும் சதையும் போல அதிமுக ஒற்றுமையாக இருக்கிறது. ஊடகங்கள்தான் ஒற்றைத் தலைமை என்ற பேச்சை கிளப்புகின்றன,நாங்கள் கிளப்பவில்லை” என்று அவர் கூறினார்.
முன்னதாக, இன்று காலை கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால், கட்சி அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருவதற்கு முன்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.