அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் புயலைக் கிளப்பி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் வருவதற்கு சற்று முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கே இருந்து புறப்பட்டு எஸ்கேப் ஆனார். ஆனால், அவர் அப்படி இல்லை என்று மறுத்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் அக்கட்சியில் ஒரு பெரும் புயலை வீசத் தொடங்கியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமைக்காக பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதனால், அனைத்து ஊடகங்களின் காமிராக் கண்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் காட்சிகளைக் கவனமாக பார்த்து வருகின்றன.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைமைக்கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பதவியைப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் கடந்த 2 நாட்களாக தனித்தனியே முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவருடைய ஆதரவாளர்கள் நேற்று (ஜூன் 15) இரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன், தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றன.
இதே போல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். சேலத்தில் உள்ள இ.பி.எஸ் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் பங்கேற்றனர்.
இதனிடையே, வருகிற 23 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து அக்கட்சியின் பொதுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செம்மலை, வைத்திலிங்கம், ஆர்.பி. உதயகுமார், சி.வி. சண்முகம், வளர்மதி, வைகைச் செல்வன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ச்யெதியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஒற்றைத் தலைமை குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும். யாருக்கும் மன வருத்தம் ஏற்படாத அளவுக்கு சுமுக முடிவு எட்டப்படும்” என்று கூறினார்.
சற்று நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தர இருந்த நிலையில், ஜெயக்குமார் பேட்டி அளித்துவிட்டு அங்கே இருந்து புறப்படுவதாக இருந்தார். இதனால், செய்தியாளர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தர உள்ள நிலையில் அவரை சந்திக்காமல் புறப்படுவது ஏன், அவரை சந்திப்பதைத் தவிர்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அப்படியெல்லாம் இல்லை. வருகிற 18 ஆம் தேதி ஒரு ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது. அப்போது நான் அவரை சந்திப்பேன். இதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் கற்பிக்கக்கூடாது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“