கருத்தியல் தளத்தில் தெளிவு இருப்பதால் தான் தனித்த சக்தியாக விசிக நிமிர்ந்து நிற்கிறது: திருமாவளவன்

புதுச்சேரி: வாக்கு வங்கியை நிரூபிக்காமல் தனித்த சக்தியாக விசிக நிமிர்ந்து, உயர்ந்து நிற்கிறது, இதற்கு கருத்தியல் தளத்தில் நமக்குள்ள தெளிவும், நாம் எடுக்கின்ற நிலைபாடுகளும் தான் காரணம் என்று ஆக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமாரின் மணிவிழா புதுச்சேரி கோரிமேடு அடுத்த தமிழக பகுதியில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் பேசிய திருமாவளவன், “ரவிக்குமார் தேர்தல் அரசியலை விரும்பவில்லை. ரவிக்குமாரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். அவர் இந்த கட்சியில் அதிகாரபூர்வமான பொறுப்பில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று மனபூர்வமாக நான் விரும்பினேன். என்னுடைய அழுத்ததின் காரணமாகத்தான் அவர் தேர்தல் அரசியலுக்குள் வந்தார்.

பல இக்கட்டான நேரங்களில் தெளிவான வழிகாட்டுதல்களை ரவிக்குமார் கொடுத்திருக்கிறார். கட்சி வலிமை பெற வேண்டும், வளர வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்துள்ளார். ரவிக்குமாரை புரிந்து கொள்வதில் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலர் போதிய தெளிவு பெறவில்லை. அவரது பங்களிப்பு விடுதலை சிறுத்தைகளுக்கானது என்பதை விட விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு மறுபடியும் உயிர்ப்பை கொடுத்தவர். கருணாநிதி தலைமையிலான டெசோவை மறுபடியும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர்.

ஒவ்வொரு அமர்விலும் புதிய புதிய தீர்மானங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தவர். அவருடைய பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவரை நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன் என்பதை விட அவருடைய பங்களிப்பு இந்த மக்களுக்கு தேவை என்று விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறது. அதற்கு ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும் என்று ரவிக்குமாரிடம் நான் கேட்டேன்.

அதற்கு அவர் கிறித்தவர்கள் இதுவரையில் ஒருவரைக்கூட குடியரசுத் தலைவராக ஆகவில்லை. அதனை விடுதலை சிறுத்தைகள் முன்மொழிவோம், அறிக்கையாக வெளியிடுவோம் என்று சொன்னார். இதற்கு கருத்தியல் தளத்தில் அவர் அளிக்கின்ற பங்களிப்பு தான் காரணம். 2001-ல் எடுத்த முடிவைத்தான் 2022-ம் நாம் எடுக்கிறோம் என்றால் நம்முடைய கருத்தியலில் தெளிவாக இருக்கிறோம். சனாதன எதிர்ப்பு என்பதன் நிலைபாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியதில் இருந்தே முன்னெடுத்து வருகிறது.

எத்தனையோ கட்சிகள் தொடங்கப்பட்டு காணாமல் போயுள்ளன. கரைந்து போயுள்ளன. பாமக, மதிமுக, தேமுதிக என ஒவ்வொரு கட்சியும் தனக்கான குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்கி நிரூபித்து காட்டிய பிறகு தான் அங்கீகாரத்தையும், கூட்டணியையும் பெற்றார்கள். ஆனால் வாக்கு வங்கியை நிரூபிக்காமல் தனித்த சக்தியாக விசிக நிமிர்ந்து, உயர்ந்து நிற்கிறது. இதற்கு கருத்தியல் தளத்தில் நமக்குள்ள தெளிவும், நாம் எடுக்கின்ற நிலைபாடுகளும் தான் காரணம். தனித்து போட்டியிட வில்லை. வாக்கு வங்கிய நிரூபிக்கவில்லை. ஆனாலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு தவிர்க்கமுடியாத சக்தியாகவும்,

தமிழக அரசியலில் நடுநாயகமாக விளங்குகின்ற பாராட்டை பெற்று நிமிர்ந்து நிற்கிறோம். இந்த வெற்றிக்கு என்னோடு பயணிக்கின்றனர்கள் முக்கிய காரணம். இதனால் தான் 32 ஆண்டுகள் விசிக தாக்கு பிடித்து நிற்கிறது.” என்று திருமாவளவன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.