நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிராக போராடிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக டெல்லி காவல்துறை நடத்தியதற்கு எதிராக இன்று நாடு முழுவதும் அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக அவரிடம் பல மணி நேரம் விசாரணையானது நடத்தப்பட்டது. நாளையும் அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேஷனல் ஹெரால்டு வழக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத் துறையை கொண்டு மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சியினர் நாடுமுழுவதும் போராட்டம், பேரணி ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். டெல்லியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மூத்த தலைவர்களும் பேரணி நடத்த முயன்ற பொழுது அனைவரும் தொடர்ச்சியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிதம்பரம், ஜோதிமணி, அதிரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் மிகக் கடுமையாக காவல்துறையினரால் நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தது. ஏற்கனவே இது தொடர்பாக டெல்லியின் பல காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோரிடமும் தனித்தனியாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டெல்லி காவல்துறையை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சண்டிகரில் ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்து காவல்துறையினர் கலைத்தனர். அதேபோல கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர். தெலங்கானாவில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதலை நடத்தினர்.
தலைநகர் டெல்லியில் காவல்துறையின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா ஹரியானா உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகை காவல்துறையின் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் முற்றுகை உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். நாளை மீண்டும் ராகுல்காந்தி அமலாக்கத் துறையின் ஆஜராக உள்ளநிலையில் போராட்டத்தை மேலும் விரிவுபடுத்த அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
– நிரஞ்சன் குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM