குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுவை ஜூன் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். வேட்பு மனுக்கள் ஜூலை 2-ம் தேதி சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் 776 எம்.பிக்களும், 4,033 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கவுள்ளனர்.
குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவிகித ஆதரவு தேவை. தற்போது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 49 சதவிகித வாக்குகளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவிகித வாக்குகளும் உள்ளன. இதர சதவிகித வாக்குகள் சிதறிக்கிடக்கின்றன. பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தாலே வெற்றி பெற்றுவிடும் என்றாலும், இழுபறியைச் சமாளிக்கக் கூடுதலாகச் சில கட்சிகளின் ஆதரவும் வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது.
ஒருவேளை காங்கிரஸோடு, இதர கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை அறிவித்தால், அது பா.ஜ.க-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். எனவே, தி.மு.க உள்ளிட்ட குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு வங்கி கட்சிகளை வளைக்க, பா.ஜ.க முனைப்புக் காட்டுகிறது. இதனால், வெங்கைய நாயுடு போன்ற தலைவர்களைத் தேர்தலில் பா.ஜ.க நிறுத்தலாம். அதேநேரத்தில் பொது வேட்பாளரை அறிவித்து குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவாரை களமிறக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்குக் கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பொது வேட்பாளராக சரத்பவார் நிற்க, அவருக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
பொது வேட்பாளர் வெற்றி சாத்தியமாகுமா?
பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவிலான வாக்குகளைக் காங்கிரஸ்தான் பெற்றிருக்கிறது. எனவே, காங்கிரஸைத் தவிர்த்து, பிற எதிர்க்கட்சிகளால் பா.ஜ.க வீழ்த்த முடியாது. அதேபோல, காங்கிரஸ் தனியாகவும், பிற எதிர்க்கட்சிகள் தனித்து நின்று எந்த பயனுமில்லை. எனவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்து, அதன் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் பொது வேட்பாளருக்குக் கிடைக்கவேண்டும். அதேநேரத்தில், பா.ஜ.க கூட்டணிக்கு தற்போது தேவை மிக மிகக் குறைவான வாக்குகள்தான். இதனால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணையாமல் தடுத்தலே போதுமானது.
அதனை பா.ஜ.க மிகச் சிறப்பாகச் செய்யும் என்பதை வரலாற்றுப் பக்கங்களைப் பிரட்டினாலே தெளிவாகத் தெரிந்து விடும்.
இருந்தபோதிலும், ஒருவேளை பொது வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற வாதம் பா.ஜ.க தலைவர்கள் பக்கத்திலும் நடக்கிறது. எனவேதான், வாக்குகள் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க களமிறங்கியுள்ளது. அதன்படி, வேட்பாளர் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளன. இதில் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மனநிலை என்ன என்பதை பிரதமர் அறிய விரும்புகிறார் எனவும் ராஜ்நாத் சிங் பேசியதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே, பலமான எதிர்க்கட்சிகளாக இருக்கும் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் பிரதமர் மோடியைச் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்துப் பேசப்பட்டிருக்கலாம். இந்த இரு கட்சிகளின் ஆதரவை பெற்றாலே, தேர்தலில் பா.ஜ.க ஈசியாக வெற்றி பெற்றுவிடும். அதேநேரத்தில், பொது வேட்பாளரின் செல்வாக்கைப் பொறுத்தும், எதிர்க்கட்சிகளின் மனநிலை மாறலாம். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆளும் கட்சியின் வீழ்த்தியது கிடையாது.
இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?
ஒருவேளை இரு வேட்பாளர்களும் ஒரே அளவில் வாக்குகள் பெற்றால் என்ன செய்யவேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் எதுவும் கூறவில்லை. நாடு குடியரசு ஆனது முதல் இதுவரை அப்படி ஒரு நிலை வரவில்லை.இதனால்தான், பொது வேட்பாளராகக் களம் காண மூத்த தலைவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் எதிர்க்கட்சிகள் இணைந்தால், வரலாறு இந்த தேர்தலில் மாற வாய்ப்பு உள்ளது. ஆனால், டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மூன்று கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவற்றுடன் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வழக்கமாக திரிணமூல் தலைவர் மம்தாவிடமிருந்து விலகி இருக்கும் காங்கிரஸ் இந்த முறை அவரது கூட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சிகள், பொது வேட்பாளராக யாரை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்து தங்களின் முடிவை எடுக்க உள்ளார்களாம். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான களம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்த கூட்டணியின் பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!