கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு: முதல்வர் பினராயி பதவி விலக்கக்கோரி பாஜக-வினர் திருவனந்தபுரத்தில் போராட்டம்

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் வழக்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கடத்தலில் கேரள முதல்வர் பினராயி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறியதை தொடர்ந்து பினராயி விஜயன் பதவி விலக்கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. முதலமைச்சர் பினராயி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காங்கிரஸ், பாஜக கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், தலைமைசெயலகம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி அவர்கள் முன்னேற முயன்றதால், அவர்கள் தண்ணீரை பீய்ச்சியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர். பாரதிய ஜனதா கட்சியினரின் போராட்டத்தால் கேரள தலைமைச்செயலகச் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏறபட்டது. இதனிடையே கொச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியும், இளைஞர் அணியினரும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக்கக்கோரி போராட்த்தில் அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து பாஜகவினரை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.        

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.