இடுக்கி: சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தொடர்பான உத்தரவை திரும்பப்பெற கோரி கேரள மாநிலம் இடுக்கியில் முழு கடையடைப்பு நடைபெற்று வருவதால் தமிழ்நாடு – கேரளா எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தேசிய பூங்கா, வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதிகள் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த பகுதிகளில் உள்ள கடைகள், கட்டுமானங்களை அகற்றி மக்கள் வாழ்விடங்களை மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 26 பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 23 பகுதிகளுக்கு விலக்கு அளிக்க கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் அதிகம் வசிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் இப்பகுதியில் உள்ள சரணாலயம், தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டுமானங்கள், கட்டமைப்புகள் குறித்து மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் கடந்த 12ம் தேதி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் காங்கிரஸ் கட்சியின் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநில எல்லை பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இல்லாததால் கம்பம், குமுளி, போடிமெட்டு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தமிழக தின கூலிகள் வீட்டில் முடங்கியுள்ளனர்.