புதுடில்லி: துப்பாக்கிச் சுடுதல் வீரர் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
பஞ்சாபின் சண்டிகரை சேர்ந்தவர் சுக்மன்பிரீத் சிங் என்ற சிப்பி சித்து. வழக்கறிஞரும், தடகள வீரருமான இவர், துப்பாக்கிச் சுடுதலில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். இவர், 2015ம் ஆண்டு செப்.,ல் சண்டிகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வந்தது. சித்துவின் நண்பரான கல்யாணி சிங் என்பவர் மீது சி.பி.ஐ.,க்கு சந்தேகம் இருந்தது. ஆனால், ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று, கல்யாணி சிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து, சி.பி.ஐ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொலை நடந்த பூங்காவுக்கு சிப்பி சித்துவை கல்யாணி சிங்தான் போனில் அழைத்தார் என சித்துவின் தாய் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. அதனால், கல்யாணி சிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம்’ என கூறப்பட்டுள்ளது.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கல்யாணி சிங், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி சபினா சிங்கின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement