அன்றாடம் ஏழுமலையானை தரிசிக்க வரும் பல்லாயிரகணக்கான பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் வசதிக்காக தியான மண்டபமும், யோகாசன மையமும் தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ளது.
தரிகொண்ட வெங்கமாம்பா என்ற பெயரில் திருப்பதியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு பின் தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியது:
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோயில்கள் கட்டப்படும் இடங்களை சேர்த்து மாநிலம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் தேவஸ்தானம் சார்பில் கோசாலைகள் அமைக்கப்பட உள்ளன.
கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அவற்றின் அருகிலேயே புல் மற்றும் தீவனம் வளர்க்கப்படும். திருப்பதி, பலமனேர் ஆகிய கோசாலையில் உள்ள பசுக்கள் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளன. இதேபோல் புதிதாக அமைக்கப்படும் கோசாலைகளும் சிறப்பாக பராமரிக்கப்படும் என்று தர்மா ரெட்டி தெரிவித்தார்.