கடந்த மார்ச் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 530 மணிவரை நடைபெறவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்
- கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பு 21ஆம் திகதி
- நாட்டில் தற்பொழுது நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து 22ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதம்
இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், 24ஆம் திகதி தவிர ஏனைய நாட்களில் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி மு.ப 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 11.00 மணி முதல் 11.30 மணி வரையான நேரத்தில் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சிவில் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விவாதித்து நிறைவேற்றப்படும்.
இதனைத் தொடர்ந்து பி.ப 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
எதிர்வரும் 22ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய நாட்டில் தற்பொழுது நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
அத்துடன், அண்மையில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்களின் போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்தி அதுகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணையின் இரண்டாவது நாள் விவாதத்துக்காக எதிர்வரும் 24ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் பி.ப 5.30 வரையான நேரத்தை ஒதுக்குவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.