கோவை – மேட்டுப்பாளையம் இடையே ஜூன் 20 முதல் கூடுதலாக 2 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்

கோவை: கோவை – மேட்டுப்பாளையம் இடையே வரும் 20-ம் தேதி முதல் கூடுதலாக 2 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை – மேட்டுப்பாளையம் இடையே தற்போது 3 முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூடுதலாக 2 ஜோடி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “கோவை – மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06814), கோவையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.35 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையம்-கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06815), மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு கோவை வந்தடையும்.

இரவில் ரயில் இயக்கம்: கோவை – மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06822), கோவையிலிருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.10 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையம் – கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06823), மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில்கள் அனைத்தும் வரும் 20-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

இந்த ரயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும். கோவை – மேட்டுப்பாளையம் இடையே எந்த ரயில்நிலையத்தில் ஏறி இறங்கினாலும், இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே, தினசரி இந்த வழித்தடத்தில் பயணிப்போர் ரூ.185 செலுத்தி மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றுக்கொண்டு கோவை – மேட்டுப்பாளையம் இடையே பயணிக்கலாம்.

இதுதவிர, 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் பெற விண்ணப்பதுடன் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதுமானது. அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன் டிக்கெட் வழங்கப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.