சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், சேலத்தில் ஈபிஎஸ் உடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை.
அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனால், கடந்த இரு தினங்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், வைத்திலிங்கம், செம்மலை, பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.பி.உதயக்குமார், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை நிறைவுபெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், வைகைச்செல்வன் ஆகியோர் தெரிவிக்கையில், “ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, ஓபிஎஸ்- ஈபிஎஸ் நகமும் சதையும் போல் உள்ளனர். திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சற்றுமுன் சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கே.பி.முனுசாமி, தம்பிதுரை, சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.