சென்னை, மாங்காடு அருகில் உள்ள பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு வழியாக பைக்கில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பைக்கிலிருந்து ஒரு பை கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகிலிருந்த டீ கடையின் கண்ணாடி உடைந்தது. மேலும், பைக்கில் வந்த ஒருவர் படுகாயமடைந்தார். வெடிச் சத்தம் கேட்டு அந்த இடத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடினர்.
இதனையடுத்து அடிபட்ட அந்த ஒருவரை மட்டும் அப்படியே விட்டுவிட்டு மற்ற இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மாங்காடு பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், அடிபட்டுக் கிடந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த நபர் ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வினோத்குமார் என்பது தெரியவந்தது. மேலும், பைக்கில் செல்லும்போது தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். படுகாயமடைந்த வினோத்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து போலீஸார் தொடர் விசாரணை செய்துவருகின்றனர். கொலை மற்றும் குற்றச் சம்பவங்களுக்குப் பயன்படுத்த நாட்டு வெடிகுண்டுகள் எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடக்கிவிடப்பட்டிருக்கிறது. மேலும், தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.