ஜப்பானுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தல்

மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜப்பானின் வெளிவிவகார பிரதி அமைச்சர், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் / நிரந்தரப் பிரதிநிதிகளை சந்தித்தார்.

ஜப்பானின் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற துணை அமைச்சர் மியாகே ஷிங்கோவுடனான இருதரப்பு சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் பரஸ்பரம் ஆதரவான நட்புறவைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், ஜப்பானுடனான உறவு இலங்கைக்கு இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்டினார். பல தசாப்தங்களாக, ஜப்பான் இலங்கையின் நெருங்கிய பங்காளியாக இருந்து வருவதாகவும், குறிப்பாக திறன் அபிவிருத்தி, கணினித் தொழில்நுட்பம், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நிர்மாணம், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான உதவிகள், மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க உதவிகள், அத்துடன் இலங்கைக்கான ஜப்பானின் ஆதரவான நிலைப்பாடு போன்றவற்றில் நல்கப்பட்ட ஆதரரவுகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஆதரவையும் அவர் நினைவு கூர்ந்தார். டிஜிட்டல் மயமாக்கல், கார்பன் கடன் மற்றும் கடலோரப் பாதுகாப்பு, மீன்பிடி மற்றும் புவி வெப்பமடைதல் உள்ளிட்ட கடல் தொடர்பான நடவடிக்கைகளில் ஜப்பானுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இலங்கை விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக வர்த்தக அமைப்பின் கீழ் வரும் பகுதிகளில் ஒத்துழைப்பை ஆராய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச அரங்குகளில் இலங்கையுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்தி, பலப்படுத்துவதற்கு ஜப்பானும் விரும்புவதாக ஜப்பானின் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை இலங்கையும், ஜப்பானும் கொண்டாடுவதாகவும், 100 ஆண்டு கொண்டாட்டத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்னும் உயர் மட்டத்திற்கு உயர்த்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர்ஃநிரந்தரப் பிரதிநிதி திருமதி மிஷேல் டெய்லருடன் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகள் குறித்து விளக்கமளித்தார்.

தெற்காசியா, வட ஆபிரிக்கா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைச்சர் விம்பிள்டன் பிரபு அஹமத் அவர்களை, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாடு குறித்து கலந்துரையாடினார். தற்போதைய சூழலில் பல நன்மைகளை செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக பொதுநலவாய அமைப்பை இலங்கை கருதுவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் நிலைமை குறித்தும் அவர் அஹமத் பிரபுவிடம் விளக்கினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் இந்திராமணி பாண்டே, பிரான்ஸின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஜெரோம் பொன்னபோன்ட் மற்றும் கனடாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் லெஸ்லி இ. நார்டன் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு சந்திப்புகளை மேற்கொண்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 16

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.