புதுடெல்லி: பண மோசடி தொடர்பான வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே ராஜேந்திர பாலாஜி செல்ல கூடாது. காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி 12ம் தேதி ஜாமீன் வழங்கியது.இந்நிலையில் ராஜேந்திய பாலாஜி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஜூன் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். குறிப்பாக விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருப்பதால், கலந்து கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் முன்ஜாமீன் வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை 3 நாட்களுக்கு தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும். மேலும் இந்த காலக்கட்டத்தில் எனக்கான மருத்துவ பரிசோதனைகளையும் முடித்து கொள்வேன்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனுவானது கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹீமா கோலி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தா, ‘அதிமுகவில் பல முக்கிய விவகாரங்கள் நடந்து வருகிறது. இதில் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட செயலாளர் என்பதால் நீதிமன்றம் அதனை கருத்தில் கொண்டு 3 நாட்கள் தளர்வு வழங்க வேண்டும்’ என்றார். அதனை நிராகரித்த நீதிபதிகள், பொதுக்குழுவில் ராஜேந்திர பாலாஜி இல்லாமல் அந்த கூட்டம் நடைபெறாது என்று ஏதேனும் காரணம் உள்ளதா? என கேள்வி எழுப்பியதோடு, தளர்வு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.