ஜிஎஸ்டி, உற்பத்தி செலவால் தமிழகத்தில் நசுங்கும் தொழில் – மாற்று வேலையை தேடி செல்லும் தோல் பதனிடும் பணியாளர்கள்

வேலூர்: ஜிஎஸ்டி, உற்பத்தி செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருச்சி மாவட்டத்தில் முடங்கிய தோல் பதனிடும் தொழிலால் அத்தொழிலை நம்பியிருந்த தொழிலாளிகள் மாற்றுத் தொழிலை தேடி செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான தொழிற்சாலைகள் வீட்டுமனைகளாக மாறி வருவது தொழில் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கிறது. உலக அளவில் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களுக்கான மாட்டுத் தோல் மற்றும் ஆட்டுத்தோல் முறையே 20 சதவீதம், 11 சதவீதம் இந்தியாவின் பங்களிப்பாகும். இந்தியாவில் ஆண்டுக்கு 320 கோடி சதுர அடி தோல் மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி நாட்டில் சுமார் 45 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலில் திருச்சி, வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடந்தாலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பட்டு, திருவளர்ச்சிப்பட்டி, குண்டூர், ராம்ஜிநகர் ஆகிய பகுதிகளில் இத்தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இப்பகுதிகளில் மட்டும் 2012-2013 காலகட்டத்தில் சுமார் 42 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரிய கட்டுப்பாடுகளால் 2014-ம் ஆண்டுக்கு பிறகு தோல் தொழிற்சாலைகள் தொடர்ந்த இயங்குவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அடுத்தடுத்த ஆண்டுகளில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கரோனா பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் பெரும்பாலான தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அத்தொழிலை நம்பியிருந்த முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் வாழ்வாதாரம் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலைநாடுகளில் தோல் பொருள்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பது போன்ற காரணங்களால் தோல் தொழில் வர்த்தகம் நாளுக்குநாள் சரிந்து வருகிறது. இதுகுறித்து திருச்சி தோல் தொழிற்சாலைகள் சங்க செயலாளர் ஷாஜித் இப்ராஹிம் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் ராம்ஜிநகர், செம்பட்டு பகுதிகளில் 42க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. இப்பகுதிக்கு வாணியம்பாடி, ராணிபேட்டை பகுதிகளில் இருந்து தோல் அனுப்பி வைக்கப்பட்டு அவை பதப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுற்றுச்சூழலுக்கு மாசுக்கேடு ஏற்படுத்துவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடைமுறைபடுத்தி வரும் கடுமையான விதிமுறைகள், கரோனா ஊரடங்கு, மின் கட்டண உயர்வு, உற்பத்தி விலை அதிகாரிப்பு போன்றவைகளால் தோல் பதனிடும் தொழில் பதனிடும் தொழில் முடங்கியது. அதுமட்டுமின்றி வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து எழுந்த கடும் போட்டியால் இந்திய தோல் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதி கேள்விக்குறியாகி உள்ளது.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகளவில் மூடப்பட்டு விட்டன. இன்றைக்கு திருச்சி மாவட்டத்தில் 4 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. சில தொழிற்சாலைகள் சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் குடோன்களாவும், மீதமுள்ளவை வீட்டு மனைகளாக மாறி வருவது கவலையளிக்கிறது.

ஜிஎஸ்டி படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கெடுபிடிகள், ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதில் ஏற்படும் கால தாமதம், தோல் பொருட்களுக்கு சிஎல்ஆர்ஐ நிறுவனத்திடம் தகுதி சான்று பெறுவதில் காலதாமதம் போன்ற காரணங்களால் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய தோல் பொருட்களை காட்டிலும் மேலைநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைவாக இருப்பதால் அவற்றை வெளிநாடுகளைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் அதிக விலை காரணமாக இந்திய தோல் பொருட்களை புறக்கணிக்கின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.