இந்திய நிகழ்வுகள்
மத அவதுாறு பதிவிட்ட2 சிறுவர்கள் கைது
தன்பாத்-ஜார்க்கண்டில், குறிப்பிட்ட மதத்தினர் குறித்து, அவதுாறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு சிறுவர்களை, போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இங்கு, தன்பாத் அருகே, குமார்துபி என்ற பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள், குறிப்பிட்ட மதத்தினர் குறித்து, அவதுாறான கருத்துக்களை சமூக வலைதளங்களில், நேற்று முன்தினம் பதிவிட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தினர், பதிவிட்ட சிறுவர்களின் வீடுகளை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மிகப் பெரிய கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. தகவல் அறிந்த போலீசார், உடனடியாக விரைந்து வந்து, இரண்டு சிறுவர்களையும் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
சிறுவர்கள் மீது, ஜாவேத் அக்தர் என்பவர் புகார் அளித்துள்ளார். சிறுவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின், ‘மொபைல் போன்கள்’ பறிமுதல் செய்யப்பட்டன.
பாடகர் கொலை வழக்கு; தாதாவுக்கு 7 நாட்கள் காவல்
சண்டிகர்-பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில், நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பஞ்சாபி பாடகராகவும், காங்., பிரமுகராகவும் இருந்த சித்து மூசேவாலா கடந்த மாதம் 29-ல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலையை விசாரிக்க, பஞ்சாப் போலீசார் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், கொலையின் பின்னணியில், நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பது தெரியவந்தது. மூசேவாலா கொலை தொடர்பாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேறொரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஷ்னோயை பஞ்சாப் அழைத்து வந்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முடிவு செய்தனர்.இதையடுத்து, பிஷ்னோய் குண்டு துளைக்காத வாகனத்தில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பஞ்சாபுக்கு கொண்டு வரப்பட்டு மான்ஸா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரிக்க, போலீசாருக்கு மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார். அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை துவக்கினர்.
தமிழக நிகழ்வுகள்
தேர் கோபுரத்தில் ‘கேபிள் டிவி’ ஒயர் சிக்கி மின்கம்பம் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
புதுச்சேரி-தேர் கோபுரத்தில் ‘கேபிள் டிவி’ ஒயர் சிக்கி, மின்கம்பம் சாய்ந்ததில் படுகாயமடைந்த ஓய்வு பெற்ற ஏ.எப்.டி., தொழிலாளி உயிரிழந்தார்.புதுச்சேரி அண்ணா நகர் 10வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்,65; ஓய்வு ெபற்ற ஏ.எப்.டி., மில் ஊழியர். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.பெருமாள் சுவாமி பக்தரான இவர், நேற்று முன்தினம் புதுச்சேரி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தை காண சென்றார். தேர் காலை 8.௦௦ மணியளவில் பெருமாள் கோவில் அருகே வந்தபோது, தேரின் விமான கோபுரம் கேபிள் ஒயரில் சிக்கியது. அந்த கேபிள் ஒயர் மின்கம்பத்தோடு சேர்த்து கட்டப்பட்டு இருந்தது.தேரை இழுத்தபோது, கேபிள் ஒயர் கட்டப்பட்டு இருந்த மின்கம்பமும் சாய்ந்து பக்தர்கள் மீது விழுந்தது. இதில் லட்சுமணன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த லட்சுமணன் நேற்று அதிகாலை 3.௦௦ மணியளவில் உயிரிழந்தார். மற்றவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இது குறித்து லட்சுமணனின் சகோதரர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருவர் மீது குண்டாஸ்
திருப்பூர் : திருப்பூரை சேர்ந்தவர் கணேஷ்ராம், 35. கடந்த 22ம் தேதி இவர் டூவீலரில் பி.என்., ரோட்டில் சென்றார். காரில் வந்த நபர் மோதுவது போல்வந்தார். இதில் ஏற்பட்ட தகராறில்கார் டிரைவர், தனது நண்பர்கள், இருவரை மொபைல் போனில் அழைத்தார். மூவரும் சேர்ந்து, கணேஷ்ராமை தாக்கினர்.
திருப்பூர் எம்.எஸ்., நகரை சேர்ந்த ஷேக் தாவூத், 25, அண்ணா நகரை சேர்ந்த முகம்மது அலி, 39 ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஷேக் தாவூத் மீது, வடக்கு போலீசில், முன்விரோதம் காரணமாக கார் தீ வைத்து எரித்த வழக்கு, ஒருவரை தாக்கிய வழக்கு உள்ளது தெரிய வந்தது.இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவிட்டார். அவரை போலீசார் குண்டாசில் கைது செய்தனர். இதுவரை, 45 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
புதுச்சேரி,-பிளஸ் 2 மாணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோரிமேடு இந்திரா நகர் அரசு செயலர் குடியிருப்பில் வசிப்பவர் கிருஷ்ண பிரசாத் சர்மா, 45. இவர் புதுச்சேரி தலைமை செயலர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரதீப் சர்மா,17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தார்.பிரதீப் சர்மா, சக மாணவியுடன் நட்பாக பழகி வந்தார். சில நாட்களுக்கு முன் தோழியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பேசவில்லை. இதனால் பிரதீப் சர்மா விரக்தியில் இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப் சர்மா வீட்டின் படுக்கை அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோரிமேடு போலீசார் பிரதீப் சர்மாவின் பிரேதத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி
அவிநாசி : அவிநாசியில், தண்ணீர் தொட்டியில் மூழ்கி, 4 வயது சிறுவன் பலியானான்.அவிநாசி, பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் 42. தனியார் மில்லில் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி சத்யா 28. இவர்களுக்கு, சுபஹரிணி, 7; ரகுநந்தன் 4, என இரு குழந்தைகள் உள்ளனர்.சத்யா பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள புத்தக கடையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்;
தன்னுடன் மகன் ரகுநந்தனையும் அழைத்து செல்வது வழக்கம். நேற்று மாலை 5:00 மணியளவில், மகனை காணாமல் தேடி உள்ளார்.சிறிது நேர தேடலுக்கு பின், அருகில் உள்ள ஆசிரம அலுவலகம் ஒன்றின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி ரகுநந்தன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.சிறுவன் எப்படி இறந்தான் என அவிநாசி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புகைக்க கஞ்சா பதுக்கிய இரு வாலிபர்கள் கைது
ஆனைமலை : ஆழியாறு சோதனைச்சாவடியில், வனத்துறையினர் வாகன சோதனை செய்து, கஞ்சா வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.ஆழியாறு சோதனைச்சாவடியில் நேற்று வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனையிட்டனர்.
அவர்களிடம், 16 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படும் மெல்லிய காகிதங்கள் இருந்தது தெரியவந்தது.விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 22, ஐதராபாத் பகுதியை சேர்ந்த தீபக், 22, என்பதும், வால்பாறைக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த வனத்துறையினர், ஆழியாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தீக்குளித்த இளம் பெண் சாவு
கள்ளக்குறிச்சி,-முடியனுாரில் விருப்பமில்லாத திருமணத்தால் மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுாரைச் சேர்ந்தவர் அஞ்சலை மகள் கவுசல்யா, 21; கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தகலியபெருமாள் மகன் ராமகிருஷ்ணன், 42; என்பவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.விருப்பமில்லாத திருமணத்தால் வாழபிடிக்கவில்லை என கவுசல்யா அடிக்கடி கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி காலை தாய்வீட்டில் இருந்த கவுசல்யா, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.உடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
டீக்கடைகாரர் அடித்து கொலை; கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
கம்பம் : காமயகவுண்டைன்பட்டியில் நேற்று அதிகாலை டீ கடைக்காரர் அழகுபகவதி 40, அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையான அழகு பகவதிக்கு மனைவி மீனா, மகள் சுவேதா உள்ளனர். இவர் கருப்பசாமி கோயில் தெருவில் டீ கடை நடத்தினார். நேற்று அதிகாலை இவரது கடையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் அழகுபகவதி தலை, உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
அருகில் ரத்த கரைபடிந்த மண்வெட்டி கிடந்தது. அவ்வழியே தோட்டங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் போலீசிற்கு தகவல் தந்துள்ளனர். உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா, கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ராயப்பன்பட்டி போலீசார் மோப்பநாய், கைரேகை நிபுணர் தடயங்களை சேகரித்தனர். ஒன்றுக்கு மேற்பட்டோர் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த இடம், ஊருக்கு வெளியே என்பதாலும், அங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லை. கொலையாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.