டீ குடிப்பதை குறைக்க மக்களிடம் பாக்., கெஞ்சல்| Dinamalar

இஸ்லாமாபாத்:கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில், இலங்கையை போல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சர் ஆஹ்சன் இக்பால் கூறியதாவது:உலகில், தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது.
கடந்த 2021 – 22ல், 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு பணம் செலுத்த முடியவில்லை.அதனால் நாட்டு நலன் கருதி, பாகிஸ்தான் மக்கள் தினமும் குடிக்கும் டீயின் அளவை குறைத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அமைச்சரின் இந்த கோரிக்கைக்கு, பாக்., மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில், அமைச்சர் இக்பாலை கடுமையாக விமர்சித்து பலரும் பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.