நுழைவுத்தேர்வு கடினம் என்று சொல்லக்கூடிய ஹைதாரபாத்திலுள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனத்தில், சீட் கிடைத்தும் சேர முடியாமல் தவித்திருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர். ஆந்திர அரசே அவருக்கு உதவ முன்வராத நிலையில், இந்த விஷயத்தைத் துணைக் குடியரசுத்தலைவரின் கவனத்துக்கொண்டு சேர்த்த மதுரையைச் சேர்ந்த ரயில்வே லோகோ பைலட்டின் முயற்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான திரைப்படம் போல நடந்த இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே நண்பர்கள் நம்மிடம் தெரிவிக்க, இதற்குக் காரணமான லோகோ பைலட் ராம்குமாரைச் சந்தித்துப் பேசினேன், “என் மகள் சினேகா தஞ்சாவூர் ‘தேசிய உணவுத் தொழில்நுட்பம் தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்'(NIFTEM-T) பி.டெக் இறுதியாண்டு படித்துவருகிறார். அவருடன் பயின்றுவரும் குண்டூரைச் சேர்ந்த தவனம் ஸ்ரீகாந்த் ரொம்ப பிரிலியன்டான ஸ்டூடன்ட். பள்ளிக் காலத்திலிருந்தே முதல் மாணவனாக வந்துகொண்டிருக்கிறார். எங்களுக்கும் நல்ல அறிமுகம். எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் நன்கு படித்து வேலையில் சேர்ந்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்
அடுத்ததாக மத்திய அரசின் விவசாய நலத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஹைதராபாத் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்ச்சர் எக்ஸ்டென்சன் மேனேஜ்மென்டில்’ எம்.பி.ஏ அக்ரி பிசினெஸ்’ கோர்ஸில் சேர வேண்டுமென்பது அவரது குறிக்கோள். அந்த இன்ஸ்டிடியூட்டில் அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் இடம் கிடைத்துவிடாது. 66 இடங்கள் மட்டுமே உள்ள ‘எம்.பி.ஏ அக்ரி பிசினெஸ்’ கோர்ஸுக்கு நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் நுழைவுத்தேர்வு எழுதுவார்கள். ரொம்ப ரேர்’ஆன அந்த கோர்ஸ் முடித்து வெளியில் வரும்போதே லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும். அந்தத் தேர்வில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
சீட் ஒதுக்கப்பட்டு ஹைதராபாத் இன்ஸ்டிடியூட் அனுப்பிய அனுமதிக் கடிதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கான மொத்தக் கட்டணம் ரூ 8,50,000 என்றும், முதல் தவணை 43,000-த்தை மே 10-ம் தேதிக்குள்ளும், இரண்டாவது தவணை ரூ 2,77,500-ஐ மே 20-ம் தேதிக்கு முன்பாகவும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டணத்தைச் செலுத்தும் நிலையில் அவர் குடும்பச்சூழல் இல்லை. நண்பர்கள் உதவியுடன் முதல் தவணையைச் செலுத்தியவர், மே 20-ஆம் தேதிக்குள் கட்டணம் கட்ட வேண்டும் என்பதால் சொந்த ஊரான குண்டூர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கல்விக்கடனுக்கு அப்ளை செய்தார். வங்கி மேனேஜரோ, சான்றிதழ் சரிபார்க்க நேரில் வரவேண்டும் என்றார்.
இதில் கொடுமை என்னவென்றால், மே 26-ம் தேதி வரை கடைசி செமஸ்டர் நடந்துகொண்டிருந்தது. இதை எழுதி முடித்தால்தான் ஹைதராபாத் இண்டிடியூட்டில் முதுகலைப் படிப்பில் சேர முடியும். அதனால் கல்விக்கடனுக்காகத் தஞ்சாவூரிலிருந்து குண்டூருக்குச் செல்ல முடியாத நிலை. அதேநேரம் மே 20-ம் தேதிக்குள் இரண்டாவது தவணை செலுத்தவில்லையென்றால் கிடைத்த வாய்ப்பு போய்விடும். ரொம்பவும் குழப்பமான நிலையில் தவித்த ஸ்ரீகாந்த், கல்விக்கடன் கிடைக்கும்வரை அதாவது மே 30 வரை அவகாசம் கொடுக்கும்படி ஹைதராபாத் அக்ரிகல்ச்சர் மேனேஜ்மென்ட் இயக்குநருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால், அவகாசம் தர மறுத்துவிட்டார்கள்.
இந்நிலையில்தான் இந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். தன்னால் அந்த கோர்ஸில் சேர முடியாதோ என்று கலங்கிவிட்டார். இவருக்கு உடனே உதவ முடிவெடுத்து அனைத்து விவரங்களையும் பெற்றேன்.
ஸ்ரீகாந்தின் இக்கட்டான நிலையை எடுத்துக்கூறி ஹைதாரபாத் இன்ஸ்டிடியூட்டில் கல்விக்கட்டணம் செலுத்த அவகாசம் தர பரிந்துரை செய்யுமாறு ஆந்திரா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். தொடர்பு கொண்ட முதலமைச்சரின் செயலாளர், மத்திய அரசு நிறுவனம் என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று வருத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே அவருடைய செயலகத்தில் இருந்து தொடர்புகொண்டு விவரம் கேட்ட அதிகாரி ரன்வீர்சிங், துணை ஜனாதிபதியின் உத்தரவுப்படி, ஹைதராபாத் அக்ரிகல்ச்சர் இன்ஸ்டிடியூட் இயக்குநரைத் தொடர்பு கொண்டு ஸ்ரீகாந்த் கல்விக்கட்டணம் செலுத்த கால அவசாகம் அளிக்கக் கேட்டுக்கொண்டார்.
ஒத்துக்கொண்டாலும் மே 25 வரைதான் அவகாசம் கொடுத்தார்கள். ஸ்ரீகாந்துக்கோ மே 26 வரை செமஸ்டர் என்பதைப் புரிந்துகொண்ட துணை ஜனாதிபதியின் செயலக அதிகாரி குண்டூர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியைத் தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களை ஆன்லைனில் பெற்று ஸ்ரீகாந்துக்கு கல்விக்கடனை வழங்க வேண்டும். மாணவரை நேரில் வரக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து ஆன்லைன் மூலம் அனைத்து ஆவணங்களையும் பெற்றார்கள். அப்பாடா, ஒருவழியாக கல்விக்கடன் கிடைக்கப்போகுது என்று நினைத்த நிலையில், 23-ம் தேதி ஆவணங்களைப் பரிசீலித்த நிலையில், ஒரு ஆவணத்தை அனுப்பி அதில் மாணவரும் பெற்றோரும் கையொப்பமிட்டு உடனே அனுப்ப வேண்டும். அதை ஆன்லைனில் அனுப்பி வைக்கக் கூடாது. அப்போதுதான் கல்விக்கடன் சாங்க்ஷன் ஆகி 25-ம் தேதி மதியம் கல்வி நிறுவனத்துக்குப் பணம் செல்லும் என்று வங்கி தெரிவிக்க, அதிர்ச்சியானோம். காரணம், இடையில் இரண்டு நாள்கள்தான் இருந்தன.
23-ம் தேதி வங்கி மெயிலில் அனுப்பிய ஆவணங்களை பிரின்ட் எடுத்துக் கையெழுத்திட்டு அதை கூரியர் மூலம் குண்டூரில் இருக்கும் தன் பெற்றோருக்கு அனுப்பி அதில் அவர்கள் கையெழுத்திட்டு 25-ம் காலை 11 மணிக்குள் ஒப்படைத்தால்தான் அன்று மதியம் கல்விக்கடன் இன்ஸ்டிடியூட்டுக்குச் செல்லும். சீட் உறுதியாகும். குண்டூர் சென்று சேர நான்கு நாள் ஆகும் என்று கூரியர் ஆபீஸில் சொல்லியதால் ஸ்ரீகாந்த் அழும் நிலைக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் சக லோகோ பைலட்டுகள் எனக்கு உதவினார்கள். ஸ்ரீகாந்த் கையெழுத்திட்ட ஆவணத்தை சென்னையிலிருக்கும் லோகோ பைலட் முனீஸ்குமாருக்கு கூரியர் அனுப்பினோம். 24-ம் தேதி மதியம் கூரியரைப் பெற்றவர், அன்று மாலை 4.45 மணிக்கு சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் விரைவு ரயில் லோகோ பைலட்டிடம் ஒப்படைத்தார். அந்த ரயில் இரவு 11.30 மணிக்கு குண்டூர் சென்றது. ரயில் நிலையத்தில் காத்திருந்த ஸ்ரீகாந்த் தந்தையிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.
அதைக் கண்ணீருடன் பெற்றுக்கொண்டவர், கையெழுத்திட்டு 25-ம் தேதி காலை 10 மணிக்கு வங்கியில் ஒப்படைத்தார். வங்கி அதிகாரியும் உடனே அதைப் பெற்றுக்கொண்டு லோன் சாங்க்ஷன் ஆர்டரை அனுப்பி வைத்தார். அதை உடனே ஹைதராபாத் இன்ஸ்டிடியூட் இயக்குநருக்கு அனுப்பி வைத்தபின் ஸ்ரீகாந்துக்கான இடம் உறுதியானது. அதைக் கேட்டதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. என்னுடைய பங்களிப்பு இதில் அணில் போலத்தான் என்றாலும் மின்னஞ்சலில் அனுப்பிய என் கோரிக்கைக்கு உடனே ஆக்ஷன் எடுத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அவர் அலுவலகச் செயலர் ரன்வீர் சிங், ஹைதராபாத்தில் இயங்கிவரும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்ச்சர் எக்ஸ்டென்சன் மேனேஜ்மென்ட்’ இயக்குநர் ஆனந்த் ரெட்டி, குண்டூர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மேனேஜர் சேகர், கூரியரைக் கொண்டு சேர்த்த சக லோகோ பைலட்டுகள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். ஸ்ரீகாந்துக்கு லோன் சாங்க்ஷன் ஆகும்வரை படபடப்பாக இருந்தது” என்றார்.
இதுகுறித்து தவனம் ஸ்ரீகாந்திடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன், ”ரொம்ப நன்றிங்க சார். என்னுடைய உயர் கல்வி சாத்தியமாக உதவிய ராம்குமார் சார், தமிழ்நாட்டு லோகோ பைலட்டுகள், துணை ஜனாதிபதி, பேங் மேனேஜர் எல்லோருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை. இந்த உதவியை வாழ்நாளில் மறக்க மாட்டேன்” என்று கலங்கினார்.
பிறர் கஷ்டம் அறிந்து விரைந்து உதவும் மனிதர்களால் உயிர்பித்துக் கிடக்கிறது இந்த பூமி!