புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெறும் தலைமை செயலாளர்கள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் பங்கேற்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு, இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் சங்க அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதன் 2-ம் நாள் மற்றும் 3-ம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாக தேசிய கல்விக் கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் பல்வகை பயிர்களை பயிரிடும் திட்டம் போன்றவற்றை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். மாநிலங்களுடன் இணைந்து விரைவான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது, கல்வி, வேலைவாய்ப்பு, எளிதான வாழ்க்கை ஆகியவற்றை ஏற்படுத்துவது, வேளாண்மையில் தற்சார்பு நிலையை அடைவது போன்றவற்றில் குழுவாக இணைந்து செயல்படுவது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.