நடிகர் விஜய் நடித்துவரும் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கும் புதியப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சிறப்புத் தோற்றத்தில் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப்படம் நடிகர் விஜயின் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று குடும்ப பின்னணிப் படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘தளபதி 66’ படத்திற்கு தெலுங்கில் ‘வரசுடு’ (‘Varasudu’) என்றும், தமிழில் ‘வாரிசு’ என்றும் தலைப்பு வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ‘வெறித்தனம்’ என்ற பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜயின் பிறந்தநாளான ஜுன் 22-ம் தேதியை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அன்றைய தினமே டைட்டிலுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் அஜித் படங்கள் தான் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘வலிமை’ என தொடர்ந்து வி செண்டிமென்ட்டில் வைக்கப்படும் நிலையில், தற்போது விஜய் படத்திற்கு ‘வாரிசு’ அல்லது ‘வெறித்தனம்’ என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நாகர்ஜுனா நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்திற்கு ‘வரசுடு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளநிலையில் விஜய் படத்திற்கும் அதே தலைப்பு வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.