புதுடெல்லி: இந்தியரான சஹில் கான் தாய்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலையில் சேர்ந்ததும் மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்துள்ளார். கூலி தொழிலாளரைப் போல நடத்தி உள்ளனர். பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டதுடன் அனுமதி பெறாமல் வெளியில் செல்லக்கூடாது என கூறியுள்ளனர். இதனால் அவர்களிடமிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 12-ம் தேதி ட்விட்டரில் நடிகர் சோனு சூட்டை டேக் செய்த சஹில் கான், “நான் தாய்லாந்தில் சிக்கி உள்ளேன். இங்கிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. எனக்கு உதவி செய்யுங்கள் சோனு சார்” என பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த சோனு சூட், அடுத்த நாள் “டிக்கெட் அனுப்பி வைக்கிறேன். உங்கள் குடும்பத்தினரை சந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது” என பதிவிட்டுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் சஹில் கான் இந்தியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இருந்தபடி ஒரு வீடியோவை பகிர்ந்தார்.
அதில், “முதலில் இந்திய அமைப்புகளிடம் உதவி கோரினேன். அவர்களிடமிருந்து பதில் இல்லை. அதன் பிறகு சோனு சூட் சாரிடம் உதவி கேட்டேன். அவருடைய உதவியால் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நன்றி. என் குடும்பத்தினரை சந்திக்க ஆவலாக உள்ளேன்” என கூறுகிறார்.