திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சு.சிவராசு கோவை மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரதீப் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறுகையில்,
கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, திருச்சியில் நீண்ட கால பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் மீது முழுமையாக விசாரணை செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்து தரப்படும்.
தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் மீது முழுமையாக கவனம் செலுத்தி மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக இந்த திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் பயன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் மாவட்டத்தில் குடிநீர், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட மூன்று விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி கூடுதல் நேரத்தை அதற்காக செலவிடுவேன்.
பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் பெறுவதில் பல மாவட்டத்தில் சுணக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த இரண்டு விஷயத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். எனவே, இதன் மீது முழுமையாக கவனம் செலுத்துவோம் என புதிதாக பதவி ஏற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப்குமார், நாகப்பட்டினத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கூடுதல் இயக்குநராக பணி புரிந்துள்ளார். பின்னர், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாகவும் கூடுதல் ஆட்சியராகவும் (வளர்ச்சி) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil