திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அப்போது வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் நிரம்பியதால், இலவச தரிசன பக்தர்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் 48 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகரித்து காணப்பட்டதால் கோயில் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று 77,326 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 38,742 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ₹4.36 கோடியை காணிக்கையாக செலுத்தினர். கோயிலில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.