கோவில்பட்டி: குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தேர்வு தொடர்பாக ஆசிரியர் ஒருவர், மாணவரிடம் சாதி குறித்து பேசிய செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது அரசு பொது தேர்வு தொடங்கும் நேரமாக இருந்ததால் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் தொடர்பாக இப்பள்ளியில் ஓர் ஆசிரியர், மாணவர் ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த ஆடியோவில், அந்த மாணவரிடம் ஆசிரியர் பேசுகையில், “உங்கள் ஊரைச் சேர்ந்த மாணவர்களை இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டாம் என கூறுகின்றனர். தற்போது பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு உள்ள சிலர் ஒரு சமூகத்தை சேர்ந்தவரை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக கொண்டுவர முயற்சி எடுக்கின்றனர். அதனால் உங்கள் ஊரில் உள்ளவர்களை தேர்தலில் கலந்துகொள்ள சொல்ல வேண்டும். ஒரு சமூகத்தின் கையில் அரசு பள்ளி சென்று விடக்கூடாது. அனைத்து தரப்பு மாணவர்களும் இங்கு வந்து பயில வேண்டும்” என அந்த ஆசிரியர் கூறுகிறார்.
மேலும் மாணவரிடம், சாதி ரீதியாகவும் அவர் பேசுகிறார். அப்போது அந்த மாணவர், “அனைவரும் சமம் தானே” எனவும் குறிப்பிடுகிறார்.
இந்த ஆடியோ நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், ஆடியோ தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தி வருகிறார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.