தென்காசி மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குவளைக்கண்ணி கிராம நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பொள்ளாச்சி அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி புஷ்பம், ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையின் மீது ராஜேந்திரன் சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று மில்லில் வேலையை பார்த்து முடித்து விட்டு புஷ்பம் தனது தாயுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த புஷ்பத்தின் தாயையும் கை மற்றும் கால்களில் கத்தியால் குத்தி உள்ளார்.
இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்களைப் பார்த்ததும் அங்கிருந்து ராஜேந்திரன் தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் புஷ்பம் மற்றும் அவரது தாயாரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், புஷ்பாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த புஷ்பத்தின் தாய் சின்ன பிள்ளைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ராஜேந்திரனை கைது செய்துள்ளனர்.