கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சார பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சோலார், சோடியம் பல்புகளை அகற்றிவிட்டு எல்.இ.டி பல்புகள் பொருத்தும் பணி தொடங்கியது. இதில் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் எல்.இ.டி பல்புகள் பொருத்தப்பட்டதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
மதுரை மாநகராட்சி போன்ற பெருநகரங்களில் ஆர்.டி.ஐ மூலம் எல்.இ.டி ஊழல் நடத்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தேனி மாவட்டத்திலும் எல்.இ.டி ஊழல் நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, கே.புதுபட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலசொக்கநாதபுரம், பூதிபுரம், தேவதானப்பட்டி, ஒடைப்பட்டி உள்ளிட்ட 11 பேரூராட்சிகளில் முக்கியச் சந்திப்புகள், தெருக்களில் உள்ள விளக்குகளை மாற்ற 2019-2020-ல் 1300 எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டிருக்கின்றன.
அப்போது புதுப்பட்டியில் உள்ள ஜே.ஆர் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் மூலம் ஒரு எல்.இ.டி பல்ப் 9,987 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பல்ப்-ன் விலை ரூ.1,200 முதல் அதிகபட்சம் 2,500 ரூபாய் மட்டுமே இருக்கும். இப்படியிருக்க 7,487 ரூபாய்க்கும் கூடுதலாக கணக்கு காட்டி ஒரு கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கிறது.
இதில் தொடர்புடைய தேனி மாவட்ட டவுன் பஞ்சாயத்து முன்னாள் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, டவுன் பஞ்சாயத்து முன்னாள் செயல் அலுவலர்கள் ஆண்டிபட்டி பாலசுப்பிரமணியன், தென்கரை மகேஸ்வரன், வீரபாண்டி செந்தில்குமார், கே.புதுபட்டி ஆண்டவர், உத்தமபாளையம் பாலசுப்பிரமணி, கோம்பை ஜெயலட்சுமி, மேலசொக்கநாதபுரம் மணிகண்டன், பூதிபுரம் கார்த்திகேயன், தேவதானப்பட்டி கணேசன், ஒடைப்பட்டி பசீர் அகமது ஆகிய 11 பேர் மீதும், கே.புதுப்பட்டியைச் சேர்ந்த ஜமுனா, ரவி ஆகிய கான்ராக்டர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
அ.ம.மு.க-வைச் சேர்ந்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தரப்பில் கடந்த 2020-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “தற்போது இந்த வழக்கில் 13 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம். பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது” என்றனர்.