2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், கௌரவ மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் அண்மையில் (10) கூடிய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தற்போது, கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின்படி, ஒரு ஊழியர் தனது தொழிலை இடைநிறுத்தும் சந்தர்ப்பங்களில், அந்த செயன்முறையை நிறைவுறுத்துவதற்கு மாத்திரமே தொழிலாளர் நியாயசபையின் கீழ் வழக்குத் தொடரப்படுகிறது. ஆனாலும், பணிபுரியும் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி, கொடுப்பனவு மற்றும் தொழில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான பல்வேறு சட்டங்களின் விதிகளை முதலாளிமார் ஏற்காத அல்லது மீறும் சந்தர்ப்பங்களில், நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும்.
நாடளாவிய ரீதியில் செயற்படும் சுமார் 80 நீதவான் நீதிமன்றங்களில் 16,000 இற்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்ட்டுள்ளமையே இங்கு எழும் பிரதான பிரச்சினையாகும். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏதேனும் நீதி கிடைக்க நீண்ட காலம் எடுப்பதோடு தற்போது மிகக் குறைவான வழக்குகளே நீதவான் நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்படுவதாலும் இந்த வழக்குகள் நாடளாவிய ரீதியில் செயற்படும் 37 தொழில் நியாய சபைகளுக்கு அனுப்பப்பட்டால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை துரிதப்படுத்த முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்தச் சட்டம் தொழிலாளர் நியாயசபை தலைவர்களுக்கு வழக்கை நடாத்திச் செல்வதற்கான அதிகாரத்தை வழங்கும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. கடந்த காலங்களிலும் தொழிலாளர் நியாயசபைகளுக்கு குறித்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் பல வழக்குகளை துரிதமாக நிறைவுசெய்து வைக்க முடிந்தது எனவும், ஆனால் பின்னர் அந்த அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் பொருளாதார நிலைமைகள் காரணமாக எந்தவொரு தொழிற்சாலையும் மூடப்படும் பட்சத்தில் முதலாளிமார் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
குறித்த சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது இது தொடர்பில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, தற்போது அதிக கவனம் செலுத்தி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விசேட பயிற்சித் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படுகின்ற போதிலும் யாழ்ப்பான மாவட்டத்தில் அவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே யாழ்ப்பான மாவட்டத்தில் மொழிப் பயிற்சித் திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் ஆலோசனை விடுத்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களின் விசேட அழைப்பின்பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் கௌரவ ஜகத் புஷ்பகுமார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கந்துக்கொண்டனர். மேலும், தொழிலாளர் அமைச்சு மற்றும் பல அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் இதன்போது பங்கு பற்றியிருந்தனர்.