பெங்களூர்: நடிகர் சித்தாந்த் கபூர், கஞ்சா மற்றும் கோகைன் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும் நடிகை ஸ்ரத்தா கபூரின் அண்ணனுமான சித்தாந்த் கபூர், இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நண்பர்களுடன் பெங்களூர் வந்திருந்தார். அப்போது ஓட்டல் ஒன்றில் இளைஞர்கள் சிலர் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து பெங்களூர் போலீசார் சோதனை நடத்தின் சிலரை பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதில் சித்தாந்த் கபூரும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டனர். பிறகு ஜாமீனில் சித்தாந்த் கபூர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரிடம் 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் சித்தாந்த் கபூர், கஞ்சா மற்றும் கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து அவர் மீதான கிடுக்கிப்பிடி அதிகரித்துள்ளது. அவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த போதைப் பொருள்களை யாரிடம் பெற்றார்கள் என விசாரிக்கும்போது, மேலும் பலர் இதில் சிக்குவார்கள் என போலீசார் நம்புகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை ஸ்ரத்தா கபூரிடம் கேள்வி கேட்க, மீடியாவினர் நேற்று முயன்றனர். அவர் படப்பிடிப்பில் இருந்தபோது, செய்தியாளர்கள் அங்கு சென்று அவரிடம் பேச முயற்பட்டபோது, அவர் மீடியாவினரை தவிர்த்துவிட்டு சென்றுவிட்டார்.