டெல்லி : நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து இருப்பதே உள்ளூர் மட்டத்தில் விநியோக சிக்கல்கள் ஏற்பட காரணம் என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் காத்திருப்பு நேரமும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து இருப்பதால் உள்ளூர் மட்டத்தில் சிக்கல்கள் உருவாகி உள்ளன. இதனை போக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக ஜூன் மாதத்தின் முதல் பாதியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தேவைப்பட்ட எரிபொருளை விட 50% கூடுதல் தேவை ஏற்பட்டு இருந்தது. ஆனால் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை உறுதி செய்கின்றன என்றும் ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது.