நாளை காலை 11 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று காத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக முன்னணி நடிகரான விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, நெல்சன், ரஜினிகாந்த், அனிருத், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ‘தலைவர் 169’ பட அறிவிப்பு மாஸாக வெளியானது.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான ‘பீஸ்ட்’ படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் ட்ரோலுக்கு உள்ளானார் இயக்குர் நெல்சன். படம் மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது ‘பீஸ்ட்’. எனினும், இந்தப் படத்தால் ‘தலைவர் 169’ படம் கைவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை படக்குழு மறுத்து வந்தது.
‘பீஸ்ட்’ பட தோல்வியால் தற்போது நெல்சன் வெறித்தனமாக ‘தலைவர் 169’ படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டு வருவதாக இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ரெடின் கிங்ஸ்லீ தெரிவித்திருந்தார். அதன்படி, படத்திற்கான முதல் பாதி கதையை நெல்சன் எழுதிவிட்டதாகவும், இறுதி ஸ்கிரிப்ட் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அடுத்த மாதம் அல்லது ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. ‘தலைவர் 169’ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் எந்த அப்டேட்டும் வெளிவராதநிலையில், ஸ்டார் புகைப்படத்தை பகிர்ந்து நாளை காலை 11 மணிக்கு புதிய அப்டேட் என்று சன் பிக்சர்ஸ் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. ரஜினியைதான் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது வழக்கம். அதனால் இது ‘தலைவர் 169’ படத்திற்கான அப்டேட்டா அல்லது வேறு ஏதேனும் புகைப்படமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.