கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி நிலையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தும்படி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது. அதில், குறிப்பாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளோர் RTPCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி ஒரே நாளில் தமிழகத்தில் 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.