'நெருப்புடன் விளையாட வேண்டாம்' – அக்னிபத் திட்டத்திற்கு தலைவர்கள் எதிர்ப்பு

அக்னிபத் என்ற தற்காலிக பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல்காந்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடியான பாதுகாப்புத் துறைக்கான ஆள்சேர்ப்பு நடத்தப்படவில்லை என்றும் தற்போது இந்தத் திட்டத்தினால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லாத சூழல் இளைஞர்களுக்கு ஏற்படும் என்றும் இது ராணுவத்திற்கு மரியாதை இன்மையை ஏற்படுத்தக்கூடியது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்றும் இந்த அக்னிபத் திட்டத்தின் மூலம் தேவையில்லாமல் நெருப்புடன் விளையாட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியப்போக்கு நாட்டின் எதிர்காலத்தையும் இளைஞர்களின் எதிர்கால பாதுகாப்பையும் அபாயகரமானதாக மாற்றிவிடும் என்றும் கூறியுள்ளார்.

இந்த புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கை என்பது ஏற்கனவே கடுமையான வறுமையால் சூழ்ந்துள்ள மக்களின் துயரங்களை அதிகரிக்கும் என்றும், இந்த புதிய நடவடிக்கை இளைஞர்கள் மத்தியில் அமைதியின்மையும் கவலையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் இது ஒரு நியாயம் இல்லாத நடவடிக்கையாக பார்க்க படுவதாகவும் எனவே உடனடியாக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

image
மத்திய அரசின் புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டம் இளைஞர்களை நாடு முழுவதும் கோபப்படுத்தி உள்ளது இந்த புதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நியாயமானதும் கூட. ராணுவம் நம் நாட்டின் பெருமைகளில் ஒன்று நாட்டிற்காக வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய வேண்டும் என்பது இளைஞர்களுடைய கனவு அதனை வெறும் நான்கு ஆண்டுகளாக சுருக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது, என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்

நான்காண்டு ராணுவத்தில் பணியாற்றிய பிறகு வேலை இல்லாதவர்களாக இளைஞர்கள் மாற்றப்படுவார்கள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகிய இரண்டு பொறுப்புகளையும் மத்திய அரசு கைகழுவி விட்டது என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

– நிரஞ்சன்குமார்

இதையும் படிக்கலாம்: நபிகள் குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேரணி – ஹைதராபாத்தில் பரபரப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.