ஐதராபாத்: தெலுங்கில் நானி, நஸ்ரியா நடிப்பில் அடடே சுந்தரானிக்கி என்கிற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ள நடிகை நஸ்ரியா முதன் முறையாக இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். ரொமான்ஸ், காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் படம் பார்த்த பலரும் இந்த படத்தின் முதல் பாதி சற்று நீளமாக உள்ளது என்றும் சில காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற விவேக் ஆத்ரேயா கூறும்போது, ‘இந்த படத்தை பார்த்த பலரும் முதல் பாதி நீளமாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும் கூறினார்கள். முதல் பாதியில் கத்திரி போட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. மீடியாவும் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்கள். இரண்டாம் பாதியை விறுவிறுப்புடன் நகரும்படி திரைக்கதை எழுதிய என்னால் முதல் பாதியும் அதுபோல் எழுதியிருக்க முடியும். ஆனால் படத்தின் கதை அதை கேட்கவில்லை. இதுதான் உண்மை. அதனால் முதல் பாதி படம் அப்படித்தான் நகர வேண்டும். அதில் எந்த காட்சியையும் நீக்க முடியாது’ என்றார்.