பாட்னா: பிஹாரில் விலங்குக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கூறி கடத்திச் சென்று கால்நடை மருத்துவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
பிஹாரில் பெகுசராய் மாவட்டத்தில் கால்நடை மருத்துவரான இளைஞர் ஒருவரை கடந்த செவ்வாய்கிழமையன்று 3 பேர் அணுகி, நோயுற்று இருக்கும் கால்நடைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை நம்பி சென்ற மருத்துவரை அந்த 3 பேரும் கடத்திச் சென்று தங்கள் வீட்டு உறவுக்கார பெண் ஒருவருக்கு தாலி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். வேறு வழியில்லாத நிலையில், உயிருக்கு பயந்து அந்தப் பெண்ணுக்கு கால்நடை மருத்துவர் விருப்பமில்லாமல் தாலி கட்டினார்.
இதுகுறித்து கால்நடை மருத்துவரின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் மருத்துவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெகுசராய் மாவட்ட எஸ்பி யோகேந்திர குமார் தெரிவித்தார். கடத்திச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். வசதியில்லாத பெண் வீட்டார், வசதியான, சமூக அந்தஸ்து உள்ள இளைஞர்களை கடத்திச் சென்று மிரட்டி தங்கள் வீட்டு பெண்களுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் பிஹாரில் அடிக்கடி நடக்கின்றன.