கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி வந்தாலே சமையல் கேஸ் விலை எவ்வளவு ரூபாய் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கு மேல் தற்போது விற்பனையாகும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெபாசிட் உயர்வு
ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு எந்த டெபாசிட் உயர்வும் கிடையாது என்றும் புதிதாக வாங்குபவர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை அதிகரித்துள்ளதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ஏற்கனவே சிலிண்டர் கனெக்சன் வைத்திருப்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு உயர்வு?
இதுவரை புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகையாக ரூபாய் 1,450 பெறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்கள் ரூ.2200 டெபாசிட் கட்ட வேண்டும். இது ஒரு சிலிண்டர் மட்டும் வாங்குபவர்களுக்கு பொருந்தும்.
2 சிலிண்டர்
ஆனால் அதே நேரத்தில் 2 கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுபவர்களுக்கான டெபாசிட் தொகை இதுவரை 2,900 ஆக இருந்தது என்பதும், இனிமேல் புதிதாக 2 சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகையை 4600 என மத்திய அரசு உயர்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு
இந்த டெபாசிட் உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் இந்த கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் அரசு
முதல் முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் முறையை கடந்த 2012ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அப்போது சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கு டெபாசிட்டா? என கடும் எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளில் முக்கியமான கட்சி பாரதிய ஜனதா என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசு
ஆனால் தற்போது பாரதிய ஜனதா கட்சி கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ஏற்றியது போதாது என்று தற்போது டெபாசிட் தொகையையும் உயர்த்தி உள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
LPG connection price increases. Details here!
LPG connection price increases. Details here! | புதுசா கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!