புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரிய மனு மீது மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. `எதுவாக இருந்தாலும் இறுதியில் சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டும்’ என்றும், `கட்டடங்கள் இடிப்பு என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க முடியாது’ எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபடக் கூடியவர்கள் என்ற சந்தேகத்திற்குள் வரக்கூடிய நபர்களுடைய வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற விடுமுறைகால சிறப்பு அமர்வில் நீதிபதிகள் போப்பண்ணா, விக்ரம் நாத் ஆகியோர் முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியு சிங், “குண்டர்கள், கல்லெறிபவர்கள், கலவரத்தை தூண்டுபவர்கள் என்ற சந்தேகம் கொள்ளக் கூடிய நபர்களுடைய வீடுகளை எந்தவிதமான முன் அனுமதியும் இல்லாமல் இடித்து தள்ளுகின்றனர். கேட்டால் இவை சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் என நியாயம் சொல்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பாகவும், அவசரநிலை காலத்திலும்கூட இப்படியான ஒரு செயல்பாடு நடந்தது கிடையாது. சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களின் வீடுகளும் இடித்துத் தள்ளப்படுகிறது. இந்தியா மாதிரியான குடியரசு நாட்டில் இது நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என வாதம் முன்வைத்தார்.
மேலும் “உத்தர பிரதேசத்தின் நகர்ப்புற திட்ட சட்டத்தின்படி, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய விதி முறைகள் எதையும் பின்பற்றாமல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து சட்டவிரோதமாக உத்தரப்பிரதேச அரசு செயல்பட்டு வருகிறது” என மனுதாரர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து, “விதிமுறைகள் பின்பற்றி தான் கட்டுமானங்கள் இடிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட யாரும் நீதிமன்றத்தை நாடாத போது ஜமாத்தை சேர்ந்த சிலர்தான் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கின்றனர்” என உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “வீடுகள் இடிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை உடனடியாக அணுக முடியாது என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்” என பதிலளித்தனர்.
தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதை தடை விதிக்க கோரிய மனு மீது மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. அத்துடன் பிரயாக்ராஜ், கான்பூர் மாநகராட்சி நிர்வாகங்களும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது உரிய சட்ட விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், “இறுதியில் சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டும். கட்டுமானங்களை இடிக்கும் முன் அரசு உரிய சட்டத்தை பின்பற்றியதா என்பதுதான் பிரச்சினையில் உள்ள கேள்வி” என்றும் சொன்னது.
இதையும் படிங்க… ’Statusக்கான ப்ரைவசி இனி இதற்கும் பொருந்தும்’ : பயனர்களுக்கு அப்டேட் மழை பொழிந்த Whatsapp!
பின்னர் “அரசு நியாயமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது சட்டத்தின்படி இருக்க வேண்டும், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது” என அடுக்கடுக்கான அறிவுரைகளை நீதிபதிகள் கூறினார்கள்.
இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
– செய்தியாளர்: நிரஞ்சன்குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM